(அஸ்லம் எஸ்.மெளலானா)

றமழான் நோன்பு காலத்தில் சாய்ந்தமருது மற்றும் மாளிகைக்காடு பிரதேசங்களில் நோன்பின் மாண்புகளைப் பேணும் வகையிலும் ஒழுக்க விழுமியங்களை நடைமுறைப்படுத்தும் பொருட்டும் சாய்ந்தமருது, மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் நேற்று புதன்கிழமை (18) மாலை விஷேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.

பள்ளிவாசல் தலைவர் எம்.எம். முபாறக் ஹாஜியார் தலைமையில் கல்முனை மாநகர சபை ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி, சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக், சாய்ந்தமருது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.ஜே.டி. சில்வா ஆகியோர் முன்னிலையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் அனைத்து பள்ளிவாசல்களின் நிர்வாகிகள், ஜம்மியதுல் உலமா சபையினர், வர்த்தக சங்கத்தினர், டியூட்டரிகளின் பொறுப்பாசிரியர்கள், உணவகங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது முக்கிய பல விடயங்கள் ஆராயப்பட்டு, அவை தொடர்பில் பல்வேறு தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.

குறிப்பாக இப்பிரதேசங்களில் செயற்படும் தனியார் கல்வி நிலையங்களில் மேலதிக வகுப்புகள் யாவும் மாலை 5.00 மணிக்கு முன்னதாக முடிவுறுத்தப்பட வேண்டும் எனவும் றமழானின் இறுதிப் பத்து நாட்களும் மேலதிக வகுப்புகள் எதுவும் நடத்தாமல், மாணவர்களுக்கு முழுமையாக விடுமுறை வழங்கப்பட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று இப்பிரதேசங்களில் செயற்படும் உணவகங்கள் யாவும் பிற்பகல் 3.00 மணிக்குப் பின்னரே வியாபாரத்திற்காக திறக்கப்பட வேண்டும் எனவும் தற்போது நடைபெறும் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை நிறைவடையும் வரை பள்ளிவாசல்களில் அதான் (பாங்கு) தவிர்ந்த ஏனைய விடயங்களுக்கு வெளி ஒலிபெருக்கிப் பாவனையை தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் பொதுவாக இரவு 11.00 மணிக்குப் பின்னர் ஒலிபெருக்கிப் பாவனையை முற்றாக தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

இவை உள்ளிட்ட அனைத்து தீர்மானங்களையும் முறையாக அமுல்படுத்துவதற்கு சம்மந்தப்பட்ட தரப்பினர் முழுமையாக ஒத்துழைப்பு வழங்க இணக்கம் தெரிவித்தனர்.





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours