​(ரஞ்சன்)

​மட்டக்களப்பில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக நீக்கக் கோரியும், அதற்கு மாற்றீடாக அரசாங்கம் கொண்டுவர முயற்சிக்கும் புதிய 'அரசைப் பாதுகாக்கும்' சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இன்று சனிக்கிழமை (28.02.2026)ஆம் திகதி மாபெரும் கண்டன ஊர்வலம்  நடைபெற்றது.

ஆரம்பமான ஊர்வலம்தாயக செயலணி அமைப்பின் இணைப்பாளர் இ.செல்வகுமார் விடுத்த அழைப்பின் பேரில், மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் திரண்டனர்.

அங்கிருந்து ஆரம்பமான ஆர்ப்பாட்ட ஊர்வலம், அரசடி வீதி சுற்றுவட்டம் மற்றும் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய வீதி வழியாக மட்டக்களப்பு காந்தி பூங்காவை சென்றடைந்தது.

இந்த போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களானஞா.சிறிநேசன்,வைத்தியர் சிறிநாத்,இரா.சாணக்கியன்,க. கோடீஸ்வரன்,உள்ளிட்டோருடன், தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி அமைப்பாளர் த.சுரேஸ், உள்ளூராட்சி சபைகளின்  தவிசாளர்கள், உறுப்பினர்கள், மாநகரசபை உறுப்பினர்கள், இலங்கை தமிழ் அரசுக் கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.

இவர்களுடன் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களும் தங்களது நீதிக்கான கோரிக்கைகளுடன் இணைந்திருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது போராட்டக்காரர்கள் பல்வேறு சுலோகங்கள் ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பினர். 

​"பயங்கரவாத தடைச்சட்டம் என்ற பெயரில் இழந்த உயிர்கள் போதாதா?"

​"சொந்த நாட்டு மக்களை பயங்கரவாதிகளாக பார்க்கும் சட்டம் எதற்கு?"

​"மக்களை ஒடுக்கும் எந்தச் சட்டமும் எமக்கு வேண்டாம்!"

​"நாட்டின் சாதாரண குற்றவியல் சட்டமே பாதுகாப்பிற்கு போதுமானது!"

​போன்ற கோரிக்கைகள் வலுவாக முன்வைக்கப்பட்டன.

காந்தி பூங்காவை சென்றடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், அங்கு விசேட அறிக்கை ஒன்றைப் பிரகடனம் செய்தனர். அரசாங்கம் ஜனநாயக விழுமியங்களுக்கு மதிப்பளித்து, மக்களை அச்சுறுத்தும் இத்தகைய அடக்குமுறை சட்டங்களை மீளப்பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

அதன் பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் அமைதியான முறையில் கலைந்து சென்றனர்.









Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours