(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
கடந்த சுனாமி அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மற்றும் பின்தங்கிய மாணவர்கள் அதிகமாகக் கல்வி கற்கின்ற பாடசாலையான சாய்ந்தமருது எம்.எஸ். காரியப்பர் வித்தியாலயத்தில் புதிதாகக் கட்டப்பட்ட கூட்ட மண்டபத்தின் திறப்பு விழாவும் வருடாந்த இப்தார் நிகழ்வும் இன்று (15) ஞாயிற்றுக்கிழமை பாடசாலையில் இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர் எம்.எஸ்.எம். ஆரிப் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், வலயக்கல்விப் பணிப்பாளரின் அனுசரணையில் மாகாண சபையின் நிதியில் புதிதாக அமைக்கப்பட்ட கூட்ட மண்டபம் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
பாடசாலையின் ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட
இந்நிகழ்வில், கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹ்துல் நஜீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இக் கூட்ட மண்டபத்தைத் திறந்து வைத்தார்.
சாய்ந்தமருது கோட்டக்கல்வி அதிகாரி அஸ்மா மலிக், மட்டக்களப்பு கல்வியற்கல்லூரி விரிவுரையாளர் எம்.ஐ.எம். அஸ்மி, ஓய்வுபெற்ற பிரதிக்கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம். முக்தார் மற்றும் ஏனைய பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பிரதேசத்தின் முக்கியஸ்தர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
இதன் போது ரமழான் மார்க்க சொற்பொழிவை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் சாய்ந்தமருது - மாளிகைக்காடு கிளையின் செயலாளர் மௌலவி நப்ராஸ் ஹனீபா நிகழ்த்தினார்.
இப் பாடசாலைக்கு கூட்ட மண்டபம் ஒன்று முக்கிய தேவையாக இருந்தது. இப் பாடசாலையில் எந்த விதமான கூட்ட மண்டபமும் இல்லாதிருந்த ஒரு குறையை இது நீக்கியுள்ளது. இக் கூட்ட மண்டபத்தை இப் பாடசாலைக்காகப் பெற்றுக் கொடுத்தமைக்காக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம். எஸ். சஹ்துல் நஜீம் மற்றும் அதனோடு இணைந்து செயற்பட்ட அனைவருக்கும் பாடசாலையின் அதிபர் எம்.எஸ்.எம். ஆரிப் மற்றும் ஆசிரியர்கள் உட்பட பாடசாலை சமூகத்தினர் தமது நன்றியைத் தெரிவித்துள்ளனர்.





Post A Comment:
0 comments so far,add yours