மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை வளாகத்திற்குள் இன்று(20.03.2026) அதிகாலை காட்டு யானை ஒன்று புகுந்தமையினால் பெரும் பரபரப்பும் அச்சமும் ஏற்பட்டுள்ளது.
இன்று (20.03.2026)ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை 5.30 மணியளவில், வைத்தியசாலைக்குள் நுழைய முயன்ற காட்டு யானையைத் தடுத்து நிறுத்த பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த காவலாளி முயற்சித்துள்ளார்.
இதன்போது சினமடைந்த யானை அவரைக் தாக்க முற்பட்டது.
எனினும், குறித்த காவலாளி மிகவும் சாமர்த்தியமாகச் செயற்பட்டு மயிரிழையில் உயிர் தப்பிய போதிலும், அவருக்குச் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வைத்தியசாலைக்குள் யானை ஊடுருவிய செய்தியால் அங்கிருந்த நோயாளிகள், வைத்தியர்கள் மற்றும் ஏனைய ஊழியர்கள் மத்தியில் பெரும் பதற்றம் நிலவியது.
பின்னர் வைத்தியசாலை வளாகத்திலிருந்து வெளியேறிய யானை, பிரதான வீதி ஊடாகச் சென்று தற்போது தேற்றாத்தீவு பகுதிக்குள் நுழைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த யானையை ஊருக்குள் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றி, மீண்டும் காட்டுப்பகுதிக்கு விரட்டுவதற்கான நடவடிக்கைகளை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
அண்மைக்காலமாக காடுகளிலிருந்து வெளியேறும் யானைகள் நகர்ப்புறங்களுக்குள் புகுந்து வருவதனால், பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் இருப்பதாகவும், இதற்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
(ரஞ்சன்)

Post A Comment:
0 comments so far,add yours