(ரஞ்சன்)
சுமார் 25 வருடங்களுக்கும் மேலாக இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்த மட்டக்களப்பு, பாலையடிவட்டை பொதுச்சந்தை கட்டடத் தொகுதி மற்றும் அதனைச் சூழவுள்ள காணிகள் நேற்று முன்தினம் உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்டன.விடுவிக்கப்பட்ட குறித்த இடத்திற்கு நேற்று மாலை (02.04.2026) பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் கள விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.
போரதீவுப்பற்று பிரதேச சபைக்குச் சொந்தமான இந்தப் பொதுச்சந்தை கட்டடத் தொகுதியை விடுவிக்குமாறு கோரி, கடந்த 2025ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற சபையின் இரண்டாவது அமர்வில் உப தவிசாளர் தங்கராசா-கயசீலன் அவர்களால் பிரேரணை கொண்டுவரப்பட்டது.
தவிசாளர் விமலநாதன்-மதிமேனன் அவர்களால் சபைக்கு சமர்ப்பிக்கப்பட்ட இப்பிரேரணை பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இக்கோரிக்கையை பாராளுமன்றத்திலும், பாதுகாப்பு அமைச்சின் விசேட கூட்டங்களிலும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தார்.
இத்தகைய தொடர் முயற்சிகளின் பலனாகவே தற்போது இக்காணி விடுவிக்கப்பட்டுள்ளது.
விடுவிக்கப்பட்ட பகுதியை நேரில் பார்வையிட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், அங்கு நிலவிய சூழல் குறித்து ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையில்.
"நீண்ட போராட்டத்திற்குப் பின் இக்காணி விடுவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
இதற்காக ஜனாதிபதிக்கும் பாதுகாப்பு அமைச்சுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இருப்பினும், நீண்டகாலமாக மக்கள் பயன்பாட்டிலிருந்த பொதுச்சந்தை கட்டடத்தினை இராணுவத்தினர் வெளியேறும்போது முற்றாக இடித்துத் தகர்த்துள்ளமை மிகுந்த வேதனையளிக்கிறது," எனத் தெரிவித்தார்.
இந்தக் கள விஜயத்தின் போது இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், போரதீவுப்பற்று பிரதேச சபை தவிசாளர் விமலநாதன்-மதிமேனன், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம்-வினோராஜ், உப தவிசாளர் தங்கராசா-கயசீலன், வசீகரன், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
சுமார் கால் நூற்றாண்டு காலமாக இராணுவ முகாமாகச் செயற்பட்ட இப்பகுதி தற்போது மக்கள் பயன்பாட்டிற்கு மீண்டும் கிடைத்துள்ளமை இப்பகுதி மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.




Post A Comment:
0 comments so far,add yours