நூருல் ஹுதா உமர்

அல் மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்கா நிறுவனத்தின் அனுசரணையில், சாய்ந்தமருது பிரதேச சமூக அபிவிருத்தி அமைப்பின் ஏற்பாட்டில் அமைப்பின் தலைவர் ஐ. ஜாபீர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற ரமலான் வினா-விடை போட்டியின் வெற்றியாளர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும், அமைப்பின் உறுப்பினர்கள் குடும்ப ஒன்று கூடலும் இன்று ஒலுவில் அஸ்ரப் நகரில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வு மதப்பண்புகளை வளர்த்தெடுத்தல், இளைஞர்களிடையே இஸ்லாமிய அறிவை ஊக்குவித்தல் மற்றும் சமூக உறவுகளை வலுப்படுத்தல் ஆகிய நோக்கங்களுடன் ஏற்பாடு செய்யப்பட்டதாக அமைப்பின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

நிகழ்வில் ரமலான் மாதத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட வினா-விடை போட்டியில் சிறந்து விளங்கிய மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பாராட்டப்பட்டு, அவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. இது பங்கேற்றவர்களிடையே பெரும் உற்சாகத்தையும் ஊக்கத்தையும் ஏற்படுத்தியது.

அதேவேளை, அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களை ஒன்றிணைக்கும் வகையில் குடும்ப ஒன்று கூடலும் நடைபெற்றது. இந்நிகழ்வின் மூலம் பரஸ்பர அறிமுகம், ஒற்றுமை மற்றும் சகோதரத்துவ உணர்வு வலுப்பெற்றதாகக் குறிப்பிடப்பட்டது.

மேலும், நிகழ்வில் அல் மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்காவின் தவிசாளர் நூருல் ஹுதா உமர், அல் மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்கா ஆளுநர் சபை உறுப்பினர்களான அதிபர் ஏ.எல். சனூஸ், அதிபர் ஏ.எச். அலி அக்பர் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டனர்.

இங்கு உரையாற்றிய விருந்தினர்கள், இத்தகைய கல்வி மற்றும் சமூகநல நடவடிக்கைகள் சமூக முன்னேற்றத்திற்கு மிக முக்கியமானவை என வலியுறுத்தினர். குறிப்பாக, இளைஞர்களை நல்லொழுக்கம் மற்றும் அறிவு வழியில் வழிநடத்துவதில் இவ்வாறான நிகழ்வுகள் பெரும் பங்காற்றுகின்றன என அவர்கள் பாராட்டினர்.

இந்நிகழ்வில் அல் மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்கா பிரதி தலைவர் பீ. எம். நாஷீக், கிழக்கு மாகாண பிரதேச சமூக அபிவிருத்தி அமைப்பின் மாவட்ட தலைவர் இளந்தளிர் இக்பால், சமூக செயற்பாட்டாளரும், கிராம நிலதாரியுமான எல். நசார் சாய்ந்தமருது பிரதேச சமூக அபிவிருத்தி அமைப்பின் உப தலைவர், செயலாளர், ஆலோசகர்கள், பொருளாளர், சமூக செயற்பாட்டாளர்கள், சாய்ந்தமருது பிரதேச சமூக அபிவிருத்தி அமைப்பின் உறுப்பினர்கள், பெற்றோர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.






இறுதியாக, இத்தகைய நிகழ்வுகளை எதிர்காலத்திலும் தொடர்ந்து நடத்த திட்டமிட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours