​மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் நிலவும் குருதித் தேவையினை நிவர்த்தி செய்து, நோயாளிகளின் நலனை மேம்படுத்தும் நோக்குடன் பழுகாமத்தில் மாபெரும் இரத்த தான முகாம் இன்று (26.04.2026) சிறப்பாக நடைபெற்றது.

பழுகாமம் இந்து கலா மன்றத்தின் ஏற்பாட்டில், பழுகாமம் பிரதேச வைத்தியசாலையில் நடைபெற்ற இந்த முகாம், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஆர். ரஞ்சிதா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் தற்போது குருதி தட்டுப்பாடு நிலவி வருவதால், அவசர சத்திரசிகிச்சைகள் மற்றும் நோயாளிகளின் தேவைகளைக் கருத்திற்கொண்டு இந்த மனிதாபிமானப் பணி முன்னெடுக்கப்பட்டது.

ஒரு தானம் - பல உயிர்கள்" எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற இந்த முகாமிற்கு, அபிவிருத்திக்கான பழுகாமம் பழைய மாணவர் சங்கம் (POSAD) தனது முழுமையான அனுசரணையினை வழங்கியிருந்தது.

​வைத்தியர் ஆர். சஞ்ஜிதா தலைமையிலான மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கி குழுவினர் மற்றும் பழுகாமம் பிரதேச வைத்தியசாலை ஊழியர்களின் சிறந்த ஒத்துழைப்புடன் இந்த முகாம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.

காலை 09.00 மணி முதல் நண்பகல் வரை இடம்பெற்ற இந்த நிகழ்வில், பிரதேசத்தைச் சேர்ந்த பெருமளவிலான இளைஞர்களும் பொதுமக்களும் ஆர்வத்துடன் கலந்துகொண்டு இரத்த தானம் வழங்கினர்.

​தமது உயிரைக் கொடுத்துப் பிள்ளையைக் காக்கும் தாயைப் போல, இரத்த தானம் செய்வதன் மூலம்  ஒருவருக்கு உயிரைக் கொடுத்து நாமும் தாய்க்கு நிகரானவர்களாக மாறலாம் என்ற உன்னத நோக்கம் இதன்போது வலியுறுத்தப்பட்டது.


(ரஞ்சன்)






Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours