( வி.ரி. சகாதேவராஜா)


அண்மையில் வெளியான உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், அம்பாறை மாவட்டத்தில் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட நான்கு துறைகளில்  முதனிலை பெற்ற தமிழ் கல்விச் சாதனையாளர்கள் கௌரவிப்பு விழா, கல்முனை நெற் ஊடக வலையமைப்பின் ஏற்பாட்டில், நேற்று  (4) சனிக்கிழமை மாலை இடம்பெற்றது.

கல்முனை நெற் ஊடக வலையமைப்பின் ஆலோசகரும், ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளருமான வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா தலைமையில் இவ்விழா கல்முனை நெற் தலைமையகத்தில் நடைபெற்றது.

முன்னொருபோதுமில்லாத வகையில், இம்முறை மாவட்டத்தில் முதலிடத்தை  பெற்ற நான்கு தமிழ் மாணவர்களான
உயிரியல் விஞ்ஞான துறையில் செல்வன். ரமேஷ் தேட்சித்( அக்கரைப்பற்று), பௌதீக விஞ்ஞான துறையில் செல்வன். ஜெகதீஸ்வரன் லதுர்ஷாந்( கல்முனை), பொறியியல் தொழில்நுட்ப துறையில் செல்வன். பிரபாகரன் ஹரிநர்த்தனன்( மண்டூர்) மற்றும் கலைத் துறையில் செல்வி.பத்மநாதன் வைஷ்ணவி
(பெரியநீலாவணை) ஆகியோர் பிரதம விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

மேலும், கல்முனை நெற் ஊடக வலையமைப்பின் உறுப்பினர்களின் பிள்ளைகளான, மருத்துவ துறைக்கு தெரிவு செய்யப்பட்ட, சிவகுமார் மிருதுவி மற்றும் சாந்தகுமார் தில்க்ஷிகா ஆகியோர் கௌரவ அதிதிகளாக கலந்து கொண்டனர்.

 முன்னதாக சாதனை மாணவர்கள் அறுவரும் கல்முனை நெற் குடும்பத்தினரால் மாலை சூட்டி வரவேற்கப்பட்டனர். கூடவே பெற்றோர்களும் வரவேற்கப்பட்டனர்.

பின்னர் தலைமையகத்தில் கௌரவிப்பு விழா நடைபெற்றது.

சாதனை மாணவர்கள் அனைவரும் அதிதிகளால்,  பொன்னாடை போர்த்தப்பட்டு நினைவுச் சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். 

நினைவுச் சின்னங்களை தாராள உள்ளம் அறக்கட்டளை நிறுவனப் பணிப்பாளர் ஜி. ஜெயபிரகாஷ் அன்பளிப்பு செய்திருந்தார்.
முதனிலை மாணவர்களுக்கான நிதி அன்பளிப்பை எஸ்எஸ்கே நிருமாண நிறுவன பணிப்பாளர் சு.சசிகுமார் அன்பளிப்பு செய்திருந்தார்.

உவெஸ்லி கல்லூரி முன்னாள் அதிபர் வி.பிரபாகரன் வாழ்த்துரை வழங்கினார்.

சாதனை மாணவர்கள் அறுவரும் தமது அனுபவங்களை, உரையாக வழங்கினர். பெற்றார் சார்பில் ஆசிரியர் எஸ்.பிரபாகரன்  நன்றியுரை வழங்கினார்.

கல்முனை நெற் சார்பில் உறுப்பினர் வி.கோகுலராஜன் நன்றியுரை வழங்கினார்.

இம்முறை, அம்பாறை மாவட்ட முதனிலை தமிழ் கல்விச் சாதனையாளர்கள் அனைவருக்கும் முதன்முதலில் ஓரிடத்தில் வழங்கப்பட்ட முதல் கௌரவிப்பு விழா இதுவென்பது குறிப்பிடத்தக்கது.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours