மட்டக்களப்பு மாவட்டம்
போரதீவுப்பற்று பிரதேசசபை அலுவலகத்தில் உள்ளூராட்சி உதவியாளராகக் கடமையாற்றி வந்த திருமதி. சுமதி நகுலேசன் அவர்கள், சுமார் 27 வருட கால நீண்ட அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றுச் செல்வதனை முன்னிட்டு, அவருக்கு மதிப்பளிக்கும் பிரியாவிடை நிகழ்வு நேற்று (10.04.2026) பிற்பகல் 2.00 மணிக்கு வெல்லாவெளி கலாசார மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.இந் நிகழ்வில், பிரதேசசபையின் தவிசாளர் வி. மதிமேனன்,செயலாளர் எஸ்.பகீரதன், பிரதேசசபை உறுப்பினர்கள், அலுவலக உத்தியோகஸ்தர்கள், மற்றும் ஊழியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
திருமதி. சுமதி நகுலேசன் அவர்கள் தனது 27 வருட அரச பணியில் பல்வேறு பொறுப்புக்களைத் திறம்பட வகித்துள்ளார்.
குறிப்பாக, போரதீவுப்பற்று பிரதேச சபையின் உள்ளூராட்சி உதவியாளராக அவர் ஆற்றிய பணிகள் மக்கள் மத்தியிலும், சக ஊழியர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தன.
எதிர்வரும் (2026.04.13) ஆம் திகதி அவர் உத்தியோகபூர்வமாகப் பணியிலிருந்து ஓய்வு பெறவுள்ளார்.
பிரியாவிடை நிகழ்வின் போது, அவரது நீண்ட காலச் சேவையைப் பாராட்டி விசேட உரைகள் நிகழ்த்தப்பட்டன.
தவிசாளர் மற்றும் ஏனைய உத்தியோகஸ்தர்கள் உரையாற்றுகையில், திருமதி. நகுலேசன் அவர்களின் கடமை மீதான அர்ப்பணிப்பு, நேர்மை மற்றும் பொறுப்புணர்வு என்பன ஏனைய ஊழியர்களுக்கு முன்மாதிரியாக அமைந்ததாகக் குறிப்பிட்டனர்.
நிகழ்வின் இறுதியில், அவருக்கு பிரதேசசபை சார்பாக கௌரவங்கள் வழங்கப்பட்டதுடன், சக ஊழியர்களின் வாழ்த்துக்களுடன் விழா இனிதே நிறைவுற்றது.
(ரஞ்சன்)


Post A Comment:
0 comments so far,add yours