(ரஞ்சன்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்டூர் - வெல்லாவெளி பிரதான வீதியூடாகப் பாயும் கடும் மழை வெள்ளம் காரணமாக, (12.05.2026) அவ்வீதியூடான போக்குவரத்து முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனால் அரச உத்தியோகஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் சொல்லொணாத் துயரங்களுக்கு உள்ளாகியுள்ளனர். 

வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் மண்டூர் கூமாவடிப் பாலம் தற்போது புனரமைப்புச் செய்யப்பட்டு வருகின்றது. 

இந்தப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், வாகனப் போக்குவரத்திற்காகப் பாலத்திற்கு அருகாமையில் தற்காலிக வீதி ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. 

கடந்த சில தினங்களாகப் பெய்து வரும் கடும் மழை காரணமாக, ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு வீதியை மூடிப் பாய்ந்ததுடன், தற்காலிகமாகப் போடப்பட்டிருந்த வீதியையும் முற்றாக உடைத்துச் சென்றுள்ளது. 

வீதி உடைந்ததன் காரணமாக மண்டூர், வெல்லாவெளி மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களுக்கிடையிலான போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளது. 

வெல்லாவெளி மற்றும் போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட பாடசாலைகள், வைத்தியசாலைகள் மற்றும் அலுவலகங்களுக்குச் செல்லும் அரச உத்தியோகஸ்தர்கள் கடமைக்குச் செல்ல முடியாமல் வீதியோரத்தில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. 

விவசாய நிலங்கள் பாதிப்பு, பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்காக நகரப் பகுதிகளுக்குச் செல்ல முடியாத நிலைமையேற்பட்டது. 

மழைக்காலம் வருவதற்கு முன்பே பாலப் பணிகளை முடித்திருக்க வேண்டும் அல்லது வெள்ளத்தைத் தாங்கக்கூடிய வகையில் தற்காலிக வீதியை அமைத்திருக்க வேண்டும் எனப் பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். 

சம்பந்தப்பட்ட அதிகாரிகளும், வீதி அபிவிருத்தி அதிகாரசபையும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து, உடைந்த வீதியைச் சீரமைக்க வேண்டும் அல்லது பொதுமக்களின் போக்குவரத்திற்காகப் பாதுகாப்பான மாற்று ஏற்பாடுகளைச் செய்து தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours