( வி.ரி.சகாதேவராஜா)

காரைதீவின்  சில முக்கியமான வீதிகளில் உள்ள வடிகான்களுக்கு மூடி இடப்படவில்லை.ஆதலால்  குப்பைகள் மற்றும் கழிவுப்பொருட்களால் நிரம்புவதோடு வீதி விபத்துகள் மற்றும் ஆபத்துக்கள் எதிர்நோக்கப் படுகின்றன.

தினமும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பொது மக்கள் பயணிக்கும் காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரிக்கும் கடலுக்கும் செல்கின்ற வீதியில் இரு மருங்கிலும் உள்ள வடிகான்களுக்கு மூடிகள் இல்லை. குறிப்பாக கொம்புச் சந்தியில் இருந்து புதிய பாலம் வரைக்குமான ஆழமான பகுதியிலுள்ள வடிகான்களுக்கு மூடிகள் இல்லை.

கடந்த காலங்களில் பல விபத்துகள் அங்கு சம்பவித்திருக்கின்றன. அவ் வடிகான்கள் சற்று ஆழமாக இருக்கிறது.
தவறி விழுந்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் துர்ப்பாக்கிய நிலை காணப்படுகிறது.


சிறியளவிலான மழை பெய்தால்கூட வெள்ளநீர் தேங்கும் நிலையும் நோய் தொற்று அபாயமும் உருவாகியுள்ளது.

நீண்டகாலமாக  மூடிகளுமில்லாமல் ஆபத்து ஏற்பட்டு வருவதை குற்றஞ்சாட்டும் பிரதேச மக்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து வடிகான்களை சுத்தம் செய்து, மூடிகள் இட்டு நிரந்தர தீர்வை வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனவே, காரைதீவு பிரதான வீதியின் பராமரிப்புக்கு பொறுப்பான கல்முனை வீதி அபிவிருத்தி திணைக்களம் இவ்விடயத்தில் அவசர கவனம் செலுத்தி மக்களின் அசௌகரியங்களுக்கு தீர்வு வழங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours