கதிர்காமம் ஆடிவேல்விழா பாதயாத்திரை காட்டுப்பாதை தொடர்பான முக்கிய ஒருங்கிணைப்புக் கூட்டம் கடந்த 17.06.2026 அன்று லாஹூகல பிரதேச செயலகத்தில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் அனுபம மங்கள விக்கிரமாராச்சி தலைமையில் நடைபெற்றது.
இதன்போது, 2026 ஆம் ஆண்டுக்கான கதிர்காமம் ஆடிவேல்விழா பாதயாத்திரையுடன் தொடர்புடைய பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
அதன்படி, கதிர்காமம் நோக்கி காட்டுப்பாதை வழியாகச் செல்லும் பாதயாத்திரிகர்களுக்காக காட்டுப்பாதை எதிர்வரும் 2026 ஜூலை 10 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது.
அன்று அதிகாலை 5.00 மணிக்கு உகந்தை ஸ்ரீ முருகன் ஆலயத்தில் நடைபெறும் விசேட பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து காலை 6.00 மணிக்கு காட்டுப்பாதை திறக்கப்படவுள்ளதுடன், பிற்பகல் 3.00 மணிக்குப் பின்னர் முதல் பாதயாத்திரைக் குழுக்கள் பயணத்தை ஆரம்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜூலை 10 ஆம் திகதி முதல் ஜூலை 24 ஆம் திகதி வரை தினமும் காலை 6.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை மட்டுமே பாதயாத்திரிகர்கள் காட்டுப்பாதையில் பயணிக்க அனுமதிக்கப்படுவர் எனவும் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் அரச திணைக்களங்கள், பாதுகாப்புப் படையினர், சுகாதாரப் பிரிவினர்,மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.
உகந்தை ஸ்ரீ முருகன் ஆலய பிரதமகுரு கலந்து கொண்டிருந்ததுடன்,அம்பாறை மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் அவர்களால் பாதயாத்திரையின் ஆன்மீக ஒழுங்கு மற்றும் வழிபாட்டு ஏற்பாடுகள் தொடர்பிலும் தனது கருத்துகளை முன்வைக்கப்பட்டன.
மேலும், வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் கலந்து கொண்டு, காட்டுப்பாதை பகுதியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வன வளங்களை காப்பாற்றுதல் மற்றும் பாதயாத்திரையின் போது வன ஒழுங்குகளை கடைப்பிடித்தல் தொடர்பாக விரிவான அறிவுறுத்தல்களை வழங்கினர்.
இதனுடன், பாதயாத்திரை வழித்தடத்தில் பிளாஸ்டிக் பாவனையை குறைப்பதும், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பதும், வனப்பகுதியில் கழிவுகள் விடுவதை முற்றிலும் கட்டுப்படுத்துவதும் தொடர்பாகவும் விசேடமாக கவனம் செலுத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் மொணராகலை மாவட்ட செயலக பிரதிநிதிகள், முப்படைகளின் பிரதிநிதிகள், பொலிஸ் திணைக்கள அதிகாரிகள், சுகாதாரப் பிரிவினர், நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அதிகாரிகள் மற்றும் பல்வேறு அரச திணைக்களங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும், பாதயாத்திரிகர்களுக்கான சேவைகளை முன்னெடுக்கும் சமூக அமைப்புகளாக ஸ்பாண்ட் (SPAND) மற்றும் சைவா (SAIVAA) சமய பணியாளர்கள் அமைப்பினர் கலந்துகொண்டு, இவ்வாண்டு பாதயாத்திரைக் காலத்தில் தாகம் தீர்க்கும் சேவை, அவசர உதவி, வழிகாட்டல் சேவை மற்றும் அடியவர்களுக்கான நலத்திட்டங்கள் ஆகியவற்றை ஒருங்கிணைந்து முன்னெடுக்கும் பணிகளின்
அதற்கான ஏற்பாடுகள் தொடர்பிலும் இக்கூட்டத்தில் தமது நிலைப்பாடுகளை எடுத்துரைத்திருந்தன.
அத்துடன், சிவதொண்டர், வலம்புரியோன், சேவற்கொடியோன் மற்றும் சைவநெறிக்கூடம் உள்ளிட்ட பிற சமூக அமைப்புகளும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தன.
கதிர்காமம் நோக்கி பயணிக்கும் அனைத்து பாதயாத்திரிகர்களும் அதிகாரப்பூர்வ அறிவுறுத்தல்களைப் பின்பற்றி பாதுகாப்பாகவும், சுற்றுச்சூழல் பொறுப்புடன் கூடிய முறையிலும் தமது யாத்திரையை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
Home
Unlabelled
கதிர்காமம் பாதயாத்திரைக்கான காட்டுப்பாதை ஜூலை 10 ல் திறக்கப்படும்.
Subscribe to:
Post Comments (Atom)





Post A Comment:
0 comments so far,add yours