ஜீவராஜ்
மட்டக்களப்பு மகிழூர் அருள்மிகு குளக்கட்டு அன்னை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த அலங்கார திருச்சடங்கானது எதிர்வரும் 22/06/2026 ஆந் திகதி திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி 29/06/2026 அன்று திருக்குளிர்த்தி இடம்பெற்று கும்பம் சொரிதலுடன் நிறைவு பெறவுள்ளது.
வருடாந்த திருச்சடங்கின் சிறப்பு நிகழ்வுகளாக 23/06/2026 செவ்வாய்க்கிழமை காலை பாற்குடபவனி மகிழூர் கண்ணகிபுரம் ஸ்ரீ கருணை விநாயகர் ஆலயத்தில் இருந்து எடுத்துவரப்பட்டு அம்மனுக்கு பாற்சடங்கு நடைபெற்று பின்னர் மகிழூர் நாகபுரம் ஸ்ரீ நாகதம்பிரான் ஆலயத்தில் பால்வார்த்தல் இடம்பெறும்.24/06/2026 புதன்கிழமை காலை வீரகம்பம் வெட்டுதல், பின்னர் தீக்கட்டை எடுத்துவரும் நிகழ்வு மகிழூர் ஸ்ரீ வீரையடி விநாயகர் ஆலயத்தில் இருந்து இடம்பெறும். 25/06/2026 வியாழக்கிழமை காலை அம்மன் மடிப்பிச்சை எடுக்கும் நிகழ்வு இடம்பெறும். 26/06/2026 வெள்ளிக்கிழமை அதிகாலை விசேட பூசையுடன் தீ மூட்டுதல் இடம்பெற்று அன்று மாலை தீமித்தல் இடம்பெறும்.27/06/2026 சனிக்கிழமை காலை விசேட பூசை இடம்பெறும். அன்று இரவு அம்மனின் திருச்சடங்கு இடம்பெற்று தவநிலைப் பூசையும் இடம்பெறும்.28/06/2026 ஞாயிற்றுகிழமை காலை விசேட பூசை இடம்பெறும். மேலும் அன்று பகல் விசேட பூசை இடம்பெற்று வட்டுக்குத்தல் இடம்பெறும். இரவு விநாயகர் பானை எழுந்தருளப்பண்ணல் இடம்பெறும். 29/06/2026 திங்கட்கிழமை திருக்குளிர்த்தி இடம்பெற்று கும்பம் சொரிதல் இடம்பெற்று திருக்கதவு அடைத்தலுடன் வருடாந்த திருச்சடங்கு நிறைவு பெறும். பூசைக்களுக்கான உபயங்களை மகிழூர் வடக்கு வட்டாரம், மகிழூர் தெற்கு வட்டாரம், கண்ணகிபுரம் வட்டாரம், நாகபுரம் வட்டாரம் மற்றும் ஆலய பொதுப்பூசை என்ற அடிப்படையில் மக்களின் பங்களிப்புடன் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. மகிழூர் மண்ணை சேர்ந்த உள்ளூர் இளைஞர்களும், வெளிநாட்டில் வசிக்கும் உறவுகளும் இணைந்து வழங்கிய நிதி பங்களிப்பில் இளைஞர்களால் மேற்கொள்ளப்படும் பல்வேறு அலங்கார வேலைப்பாடுகளுடன் அன்னை முத்துமாரியம்மனின் வருடாந்த திருச்சடங்கு சிறப்புபெறவுள்ளது

Post A Comment:
0 comments so far,add yours