பாறுக் ஷிஹான்

குற்றச் செயல்களை கட்டுப்படுத்தவும், போக்குவரத்து ஒழுங்குமுறைகளை முறைப்படுத்தவும், அனைத்து முச்சக்கர வண்டிகள் பதிவு செய்யும் விசேட வேலைத்திட்டம் சம்மாந்துறை பொலிஸாரால் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இவ் வேலைத்திட்டத்தின் முதற்கட்டமாக, கடந்த 2026 ஜூன் 25ஆம் திகதி சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் இயங்கும் அனைத்து முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் தங்களது வாகனங்களை தவறாது பதிவு செய்ய வேண்டும் என ஒலிபெருக்கி மூலம் நகர் முழுவதும் விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டது.

அத்துடன், அனைத்து உரிமையாளர்களும் ஜூன் 26ஆம் திகதி சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு சமூகமளிக்குமாறு பொலிஸாரால் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

அதற்கமைய, ஜூன் 26ஆம் திகதி சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வழிகாட்டலில் பொலிஸ் உத்தியோகத்தர்களால் முறையான பதிவுகள் மேற்கொள்ளப்பட்டன.

சம்மாந்துறை நகரின் பல்வேறு முச்சக்கர வண்டி தரிப்பிடங்களைச் சேர்ந்த (Three-wheel stands) வாகனங்களும், வீடுகளில் தனிப்பட்ட தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படும் முச்சக்கர வண்டிகளும் தனித்தனியாக இனங்காணப்பட்டு விவரங்கள் சேகரிக்கப்பட்டன.

மேலும், பதிவு நடைமுறைகள் நிறைவடைந்ததை அடுத்து, அவை சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் முறைப்படி பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் என்பதை உறுதிப்படுத்தும் வகையில், பிரத்தியேக அடையாள ஸ்டிக்கர்கள் (Identity Stickers) முச்சக்கர வண்டிகளில் ஒட்டப்பட்டன.

இந்த விசேட வேலைத் திட்டத்தின் மூலம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் சட்டவிரோத முச்சக்கர வண்டிகளின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்படுவதுடன், பயணிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்மாந்துறை பொலிஸாரின் இந்த துரித மற்றும் திட்டமிட்ட விசேட ஏற்பாட்டுக்கு பிரதேச பொதுமக்களும், முச்சக்கர வண்டி சங்கத்தினரும் தங்களது முழுமையான ஒத்துழைப்பை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours