​மட்டக்களப்பு மாவட்டம், போரதீவுப்பற்று காக்காச்சிவட்டை கிராமத்தில் நீண்ட நாட்களாகப் பழுதடைந்த நிலையில் காணப்பட்ட வீதி மின்விளக்குகள் அனைத்தும்   (19.06.2026) ஆம் திகதி முதல் அவசரமாகத் திருத்தியமைக்கப்பட்டு, நேற்று(22.06.2026)ஆம் திகதி அனைத்து புதிய தெருவிளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன.

இதன் மூலம் கிராமத்தில் நீண்டநாட்களாகக் காணப்பட்ட இருள் சூழ்ந்த நிலை நீக்கப்பட்டு, வீதிகள் அனைத்தும் ஒளிரூட்டப்பட்டுள்ளன.

​போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச சபையின் தவிசாளர் வி. மதிமேனன் அவர்களின் நேரடிப் பணிப்புரைக்கு அமைவாக, பிரதேச சபை ஊழியர்களின் அதிவேகப் பங்களிப்புடன் இப்பணிகள் விரைவாக முன்னெடுக்கப்பட்டன. 

அத்துடன் பிரதேச சபையினால் புதிய தெருவிளக்குகளும், மின்குமிழ்களும் வீதிகளில் பொருத்தப்பட்டன.

​"அன்னையின் கரங்கள்" அமைப்பின் அரிய பங்களிப்பு.

இப்பாரிய வேலைத்திட்டத்திற்கு காக்காச்சிவட்டை "அன்னையின் கரங்கள்" அமைப்பானது பெருந்தொகை நிதியினைச் செலவு செய்து புதிய தெரு மின்குமிழ்களைக் கொள்வனவு செய்து கொடுத்துள்ளது. 

வெளிநாடுகளில் வாழும் காக்காச்சிவட்டை கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களின் முழுமையான நிதிப் பங்களிப்புடன் இந்த உதவி வழங்கப்பட்டுள்ளதுஇத்தோடு நின்றுவிடாமல், இவ்வமைப்பானது கிராமத்தில் மிகவும் வறிய நிலையில் உள்ள குடும்பங்களை இனம் கண்டு வாழ்வாதார உதவிகளை வழங்குதல் மற்றும் பாடசாலைகளுக்குத் தேவையான உதவிகளைச் செய்தல் போன்ற சமூக நலன்புரி வேலைத்திட்டங்களையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தற்போது இடம் பெறும் மாரியம்மன்  ஆலய உற்சவத்தை முன்னிட்டு, கிராமத்து வீதிகளில் உள்ள அனைத்து மின்குமிழ்களையும் தங்குதடையின்றி ஒளிரச் செய்யும் நோக்கில் இப்பணிகள் அனைத்தும் வெல்லாவெளி வட்டார உறுப்பினர் வரதராஜா அவர்களின் நேரடிக் கண்காணிப்பில் செவ்வனே செய்து முடிக்கப்பட்டன.

நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த வீதி விளக்குகள் அனைத்தும் தற்போது புதுப்பிக்கப்பட்டும்,புதிதாக போடப்பட்டும்,தங்குதடையின்றி ஒளிர்வதால், காக்காச்சிவட்டை கிராம மக்களும் ஆலயத்திற்கு வருகை தரும் பக்தர்களும் தங்களது நெஞ்சார்ந்த நன்றியையும் பெரும் மகிழ்ச்சியையும் தெரிவித்துள்ளனர்.





(ரஞ்சன்)

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours