நூருல் ஹுதா உமர்

கிழக்கு பிராந்தியத்தில் சமூக சேவைகளை முன்னெடுக்கும் நோக்கில் 1995 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட கிழக்கு நட்புறவு ஒன்றியத்தின் (EFO) புதிய செயலகக் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (31) சிறப்பாக நடைபெற்றது.

பிரதேசத்தின் முன்னணி கல்விமான்கள், திணைக்களத் தலைவர்கள், ஓய்வு பெற்ற உயர் அதிகாரிகள், அரச அதிகாரிகள் மற்றும் தொழிலதிபர்கள் உள்ளிட்ட சமூகப் பொறுப்புமிக்க ஆளுமைகளை உறுப்பினர்களாகக் கொண்டு இயங்கி வரும் கிழக்கு நட்புறவு ஒன்றியம், கடந்த மூன்று தசாப்தங்களாக பல்வேறு சமூக நலப் பணிகளை முன்னெடுத்து வருகிறது.

“நட்புறவின் மூலம் மனிதநேயமிக்க சமத்துவமான சமுதாயத்தை உருவாக்குதல்” என்ற தூரநோக்கை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்த அமைப்பு, வறுமை மற்றும் கஷ்டமான சூழ்நிலைகளில் வாழும் குடும்பங்கள் மற்றும் தனிநபர்களை நேரடியாக அடையாளம் கண்டு, அவர்களின் கல்வி, கலாசார, சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது.

உறுப்பினர்கள், கொடையாளர்கள் மற்றும் அரச, அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் சமூகத் தேவைகளுக்கு ஏற்ப பல்வேறு நலத்திட்டங்கள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ஒன்றியத்தின் நீண்டகால கனவாக விளங்கிய சொந்த செயலகக் கட்டடத்தை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டமை, அதன் வரலாற்றில் முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

இந்நிகழ்வில் உரையாற்றிய கிழக்கு நட்புறவு ஒன்றியத்தின் தவிசாளரும் பொறியியலாளருமான எம்.எம். நஸீர், “இந்த புதிய கட்டிடம் வெறும் கட்டடம் அல்ல. இது எமது ஒன்றியத்தின் ஒற்றுமை, நம்பிக்கை, விடாமுயற்சி மற்றும் இலட்சியத்தின் சின்னமாகும். எதிர்காலத்தில் பிரதேசத்தின் சமூக, கலாசார மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் மையமாக இது திகழும்” எனத் தெரிவித்தார்.

மேலும், இந்தக் கட்டிடத்தை குறுகிய காலத்திற்குள் நிர்மாணித்து முடிப்பதற்காக உறுப்பினர்கள், நலன் விரும்பிகள் மற்றும் பொதுமக்களின் தொடர்ச்சியான ஆதரவும் பங்களிப்பும் அவசியம் என அவர் வலியுறுத்தினார்.

அத்துடன், ஒன்றியத்தின் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றி மறைந்த முன்னோடிகளை நினைவுகூர்ந்த அவர், இத்திட்டத்தை சாத்தியமாக்க பங்களித்த அனைத்து உறுப்பினர்களுக்கும் தனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தார்.

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் சாய்ந்தமருது கிளை செயலாளர் நப்ராஸ் மௌலவியின் துஆவுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள கிழக்கு நட்புறவு ஒன்றியத்தின் புதிய செயலகக் கட்டடம், அமைப்பின் எதிர்கால செயற்பாடுகளுக்கான வலுவான அடித்தளமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours