நூருல் ஹுதா உமர்


"வாசிப்பதாலும் கேட்பதாலும் மாணவர்கள் 10 முதல் 20 சதவீத அறிவையே பெற்றுக்கொள்கின்றனர். ஆனால் தாங்களே செய்து கற்றலும், மற்றவர்களுக்கு செய்து காட்டலும் 90 சதவீதம் வரை அறிவை நிலைநிறுத்துகின்றது. இதுவே நவீன கல்வியின் அடிப்படைத் தத்துவமாகும். அதனால்தான் கணித ஆய்வுகூடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன" என்று கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹுதுல் நஜீம் தெரிவித்தார்.

கல்முனை கல்வி மாவட்டத்தின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக, பொது கல்வி நவீனமயமாக்கல் (General Education Modernization - GEM) திட்டத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ள நவீன கணித ஆய்வுகூடம் கடந்த வாரம் கல்முனையில் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.  

அவர் தனது உரையில் மேலும் கூறுகையில், நாட்டளவில் கல்வி மறுசீரமைப்பை நோக்கமாகக் கொண்டு முன்னெடுக்கப்படும் GEM திட்டத்தின் கீழ் மாகாணங்களுக்கு கணித ஆய்வுகூடங்கள் நிறுவப்படுகின்றன. முதற்கட்டமாக சுமார் 300 பாடசாலைகளில் இவ்வாய்வுகூடங்கள் நிறுவப்படவுள்ள நிலையில், கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்திற்காக கல்முனை கல்வி வலயம் தெரிவு செய்யப்பட்டிருப்பது இவ்வலயம் கல்வியில் அடைந்துள்ள உயரிய பெறுபேறுகளுக்குக் கிடைத்த தேசிய அங்கீகாரமாகும் என்றார்.

2023 ஆம் ஆண்டு கணிதப் பாடத்தில் கல்முனை கல்வி வலயம் மாகாண மட்டத்தில் மிகச் சிறந்த அடைவுகளைப் பதிவு செய்ததன் அடிப்படையிலேயே இவ்வரிய வாய்ப்பு கிடைத்ததாக அவர் குறிப்பிட்டார். "இது அதிகாரிகளுக்குக் கிடைத்த பரிசு அல்ல; கல்முனை வலயத்தின் ஆசிரியர்கள், அதிபர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கூட்டு உழைப்புக்குக் கிடைத்த பரிசாகும்" எனவும் அவர் தெரிவித்தார். இவ்வாய்வுகூடம் கல்முனை கல்வி வலயத்தின் கணிதக் கல்வியில் புதிய அத்தியாயத்தை ஆரம்பித்து வைக்கும் மைல்கல்லாக அமையும் என்றார்.

மேலும், கணித ஆய்வுகூடத்தை எந்தப் பாடசாலையில் அமைப்பது என்பது தொடர்பில் பல்வேறு சவால்கள் எழுந்ததாகவும், எதிர்காலத்தில் கல்வி வளர்ச்சிக்கான அதிக வாய்ப்புகள் காணப்பட்டதாலும், உட்கட்டமைப்பு வசதிகளை விரிவுபடுத்தும் தேவை இருந்தமையால் கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயம் தெரிவு செய்யப்பட்டதாகவும் அவர் விளக்கமளித்தார்.

பாடசாலையின் தரமுயர்த்தல் நடவடிக்கைகளில் முன்னாள் அதிபர்கள், கல்வி அதிகாரிகள், அரசியல் பிரதிநிதிகள் ஆற்றிய பங்களிப்பு மிகவும் பெறுமதியானது என்றும், குறிப்பாக புதிய கட்டட வசதிகளை உருவாக்குவதில் பலரின் ஒத்துழைப்பு கிடைத்ததாலேயே இன்றைய முன்னேற்றத்தை அடைய முடிந்ததாகவும் அவர் நன்றியுடன் நினைவுகூர்ந்தார்.

மாணவர்களிடம் உரையாற்றிய அவர், பாரம்பரிய கற்பித்தல் முறைகளுடன் செயன்முறை கல்வியும் இணைந்தாலே மாணவர்களின் அறிவு முழுமையாக வளர்ச்சியடையும் என வலியுறுத்தினார். தொடர்ந்தும் கணிதம் என்பது ஒரு பாடம் மட்டுமல்ல; வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் வெற்றிபெற உதவும் சிந்தனைத் திறனை வளர்க்கும் கருவி என அவர் சுட்டிக்காட்டினார்.

போட்டிப் பரீட்சைகள், நிர்வாக சேவைகள், வெளிநாட்டு இராஜதந்திரப் பணிகள், கல்வி நிர்வாகம், பொறியியல், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து உயர்தரத் தொழில்களுக்கும் கணித அறிவும் அறிவுத்திறனும் (IQ) அடிப்படைத் தேவையாக இருப்பதாகவும், மாணவர்கள் இப்பாடத்தில் அதிக ஈடுபாட்டுடன் செயற்பட வேண்டுமெனவும் அவர் அறிவுறுத்தினார்.

ஆய்வுகூடத்தில் உள்ள அனைத்து கற்றல் உபகரணங்களையும் முழுமையாகப் பயன்படுத்தி, குழு செயற்பாடுகள், செய்முறை விளக்கங்கள், கணித மாதிரிகள் மற்றும் அறிவியல் சிந்தனைகளை வளர்த்துக்கொள்ளுமாறும் அவர் மாணவர்களிடம் கேட்டுக்கொண்டார்.புதிய ஆசிரியர் நியமனங்கள் மூலம் கல்முனை கல்வி வலயத்தில் கணிதக் கல்வியை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

கல்முனை கல்வி வலயத்தின் கல்வி வரலாற்றில் புதிய மைல்கல்லாகக் கருதப்படும் இந்த கணித ஆய்வுகூடம், எதிர்காலத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்களின் கணிதத் திறனை மேம்படுத்தும் அறிவுக் களமாக அமையும் என்ற நம்பிக்கையும் நிகழ்வில் வெளியிடப்பட்டது.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours