மட்டக்களப்பு மாவட்டம்போரதீவுப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட பழுகாமம் ஆத்தியடிச் சந்தியில் பொதுமக்களின் பாதுகாப்புக்காகப் பொருத்தப்பட்டிருந்த சூரியசக்தி மின்விளக்கை (Solar Light) நேற்று (12.07.2026) ஆம் திகதி இரவு சமூகவிரோதிகள் சிலர் அடித்துடைத்து, திருடிச் சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


​பழுகாமம் - தூம்பங்கேணி பிரதான வீதியும், வெல்லாவெளி - அம்பிளாந்துறை பிரதான வீதியும் ஊடறுக்கும் முக்கிய நாற்சந்தியாக இந்த ஆத்தியடிச் சந்தி காணப்படுகிறது.


இப்பகுதியில் சிறிய வழிப்பிள்ளையார் ஆலயம் மற்றும் சிறிய கடை என்பன அமைந்துள்ள போதிலும், நீண்டகாலமாக மின்சார வசதியற்ற ஒரு இருள் சூழ்ந்த பகுதியாகவே இது காணப்பட்டது.


இவ்வீதியூடாக இரவு வேளைகளில் பயணிக்கும் வாகனங்கள், போதிய வெளிச்சமின்மை காரணமாக வீதியில் நடமாடும் யானைகள் மற்றும் மாடுகளுடன் மோதி தொடர்ச்சியாகப் பாரிய விபத்துக்கள் இடம்பெற்று வந்தன. 


இவ்விபத்துக்களினால் பல மனித உயிர்களும் பலியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


பொதுமக்களின் இந்த நீண்டகால அவல நிலையைக் கருத்திற்கொண்டு, போரதீவுப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் விமலநாதன் மதிமேனன் அவர்களின் விசேட வேண்டுதலுக்கு அமைவாக, அண்மையில் இப்பகுதியில் சூரியசக்தி மின்குமிழ் (Solar Light) ஒன்று பொருத்தப்பட்டது. 


இதனால் இப்பகுதியின் இருள் நீக்கப்பட்டு, இரவு வேளைகளில் அச்சமின்றி பொதுமக்கள் மற்றும் வாகன சாரதிகள் தங்களது பயணங்களை மேற்கொண்டு வந்தனர்.


இந்நிலையில், நேற்று (12.07.2026)ஆம் திகதி  ஞாயிற்றுக்கிழமை இரவு வேளையில் மின்சாரத் தூணில் ஏறிய சில சமூகவிரோதிகள், பொதுமக்களின் நலன் கருதிப் பொருத்தப்பட்டிருந்த சூரியசக்தி மின்குமிழை அடித்துடைத்து, சட்டவிரோதமான முறையில் திருடிச் சென்றுள்ளனர்.


​பொதுச்சொத்துக்களைச் சேதப்படுத்தி, மக்களின் உயிருக்கே அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுள்ள இந்த விசமிகளின் செயல் குறித்து பிரதேச பொதுமக்கள் மற்றும் வாகன சாரதிகள் தங்களது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்து வருவதுடன், இது குறித்து உரிய தரப்பினர் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


(ரஞ்சன்)

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours