மாளிகைக்காடு செய்தியாளர்
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் கர்ப்பிணி தாய்மார்களுக்காக நடைபெற்ற மாதாந்த தாய்சேய் நலக் கிளினிக்குடன் இணைந்த டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மாதன் கலந்துகொண்டு, கர்ப்பிணி தாய்மார்களுக்கு டெங்கு நோய் தொடர்பான விரிவான விழிப்புணர்வு உரையாற்றினார்.
இதன்போது, பயணம் மற்றும் சுற்றுலா மேற்கொள்ளும் சந்தர்ப்பங்களில் நுளம்புக் கடியிலிருந்து எவ்வாறு தங்களைப் பாதுகாத்துக்கொள்வது, டெங்கு நோய் பரவலைத் தடுப்பதற்காக வீட்டுச் சூழலை தூய்மையாகப் பராமரிப்பதன் அவசியம், நுளம்பு பெருகக்கூடிய இடங்களை அகற்றுதல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
மேலும், தொடர்ச்சியாக காய்ச்சல் ஏற்பட்டால் அதனை அலட்சியம் செய்யாமல் உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலைக்குச் சென்று இரத்தப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.
கர்ப்பகாலத்தில் டெங்கு நோயால் ஏற்படக்கூடிய சிக்கல்கள், தாய் மற்றும் சேயின் நலனைப் பாதுகாப்பதற்காக கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார நடைமுறைகள், மருத்துவ ஆலோசனைகளை முறையாகப் பின்பற்றுவதன் அவசியம் என்பன குறித்தும் டாக்டர் ஜே. மாதன் தெளிவுபடுத்தினார்.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட கர்ப்பிணி தாய்மார்களுக்கு டெங்கு தடுப்பு தொடர்பான சுகாதார ஆலோசனைகளும் வழங்கப்பட்டதுடன், விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.
.jpg)
.jpg)
.jpg)
Post A Comment:
0 comments so far,add yours