பாறுக் ஷிஹான்- 


 
இலங்கைக்கு கிழக்கே சுமார் 15 கடல்மைல் தொலைவில் உள்ள பொத்துவில் கடற்பரப்பில், சீரற்ற வானிலை காரணமாக ஆபத்தில் சிக்கியிருந்த உள்நாட்டு மீன்பிடி படகொன்றின் மீனவர் ஒருவர் இலங்கை கடற்படையினரால் சனிக்கிழமை பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.

பொத்துவில் கடலில் அனர்த்தத்திற்குள்ளான மீன்பிடி படகு தொடர்பாக, கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தினால் வழங்கப்பட்ட அவசர அறிவித்தலுக்கு அமையவே இந்த மீட்பு நடவடிக்கை உடனடியாக முன்னெடுக்கப்பட்டது.

நேற்று (17) நிலவிய மிகவும் மோசமான வானிலைக்கு மத்தியிலும், இலங்கை கடற்படையின் 'விஜயபாகு' அதிவேகப் போர்க்கப்பல் மற்றும் மேலதிக கடற்படைப் படகுகளைப் பயன்படுத்தி, அக் கடல் பகுதியில் விசேட தேடுதல் நடவடிக்கை ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. கடற்படையினரின் தீவிர தேடுதல் நடவடிக்கையின் போதே, பொத்துவிலுக்கு அப்பாலுள்ள கடற்பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த மீனவர், அவரது மீன்பிடி படகுடன் பத்திரமாக மீட்கப்பட்டார்.

இவ்வாறு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட மீனவருக்கு, இலங்கை கடற்படைக் கப்பலான 'விஜயபாகு'வின் மருத்துவக் குழுவினரால் உடனடியாக முதலுதவிச் சிகிச்சைகள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து அவர் மிக விரைவாக கரைக்கு கொண்டு வரப்பட்டு, மேலதிக அவசர சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இலங்கைக்கு சொந்தமான கடல்சார் தேடல் மற்றும் மீட்பு வலயத்திற்குள் (SRR) ஆபத்தில் சிக்கியிருக்கும் கடற்பயணிகள் மற்றும் மீனவ சமூகத்தினரைப் பாதுகாப்பதற்காக, கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் (MRCC) தொடர்ச்சியான ஒருங்கிணைப்புடன் இவ்வாறான உடனடி மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க இலங்கை கடற்படை எப்போதும் தயார் நிலையில் உள்ளதாக கடற்படைத் தலைமையகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours