வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு, பழுகாமம் ஸ்ரீ திரோபதை அம்மன் ஆலயத்தில் வருடாந்த தீப்பள்ளயச்சடங்கு (தீமிதி உற்சவம்) இன்று (31) ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ மிகவும் பக்திப் பெருக்கோடு சிறப்பாக நடைபெற்றது.
ஆலயத்தில் பல நாட்களாக நடைபெற்று வந்த வருடாந்த உற்சவத்தின் சிகர நிகழ்ச்சியாக இத்தீப்பள்ளயச் சடங்கு அமைந்தது. விரதமிருந்து காப்புக்கட்டிய நூற்றக்கணக்கான பக்தர்கள், "அரோகரா" கோஷ முழக்கத்துடன் பக்திப் பரவசத்துடன் தீக்குழியில் இறங்கி நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர். இந்நிகழ்வில் சூழவுள்ள கிராமங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு அம்மனின் அருளைப் பெற்றனர்.
மகாபாரத காப்பியத்தின் முதன்மை நாயகியான திரௌபதி, சக்தி வழிபாட்டில் திரோபதை அம்மனாக அவதார தெய்வமாகப் போற்றப்படுகிறார். இலங்கை மற்றும் தென்னிந்தியாவில் அம்மன் வழிபாட்டில் திரோபதை அம்மன் வழிபாடு மிக முக்கிய இடம் வகிக்கிறது
மகாபாரதக் கதையில் பல்வேறு துன்பங்களை எதிர்கொண்ட போதிலும், தர்மத்தின் வழியிலிருந்து சற்றும் பிறழாமல் வாழ்ந்தவர். இதனால் நீதியையும், கற்பையும், தர்மத்தையும் காக்கும் தெய்வமாக பக்தர்கள் இவரை வழிபடுகிறார்கள்.
திரோபதை அம்மன் ஆலயங்களில் தீமிதி (தீப்பள்ளயம்) மிகவும் முக்கியமானது. தனது கற்பின் தூய்மையையும் வீரத்தையும் உலகிற்கு உணர்த்த அக்னி பிரவேசம் செய்ததன் நினைவாகவே, பக்தர்கள் விரதமிருந்து தீமிதித்து தங்கள் நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர். தீப்பள்ளயத்தில் இறங்கும் பக்தர்களை அம்மன் அக்னியின் தகிப்பிலிருந்து காப்பதாக நம்பப்படுகிறதுகுறிப்பாக மட்டக்களப்புப் பிரதேசத்தில் மகாபாரதச் சடங்கு வழிபாடுகள் மிகத் தொன்மை வாய்ந்தவை. மகாபாரதக் கதையைப் பாடிப் படித்து, சடங்குகள் இயற்றி திரோபதை அம்மனை வழிபடும் பாரம்பரியம் தலைமுறை தலைமுறையாகப் பேணப்பட்டு வருகின்றது.










Post A Comment:
0 comments so far,add yours