மட்டக்களப்பில் உள்ள ஊடகவியலாளர்கள் காசு வாங்கிவிட்டு செய்திகளை எழுதுவதாக மட்டக்களப்பு ஊடகவியலாளர்களை பொதுவெளியில் அவமானப்படுத்தியுள்ளார் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிநாத்.
கடந்த 14.07.2026 அன்று மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டபோது தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிநாத் அவர்கள் அங்கு கலந்து கொண்ட ஊடகவியலாளர்களை பார்த்து " வாங்கிய காசுக்கு எழுதத்தானே வேண்டும் என ஊடகவியலாளர்களை மிக மோசமாக அவமானப்படுத்தி பேசியது அங்குள்ள ஊடகவியலாளர்களை மிகவும் கோபப்பட வைத்ததோடு ஒரு பாராளுமன்ற உறுப்பினர் அர்ப்பணிப்பு மிக்க ஊடகவியலாளர்களையும், ஊடகத்துறையையும் காசு வாங்கிவிட்டு செய்திகளை பிரசுரிப்பதாக பொது வெளியில் பேசியமை ஊடகவியலாளர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிநாத் அவர்களின் இந்த செயற்பாடு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஒட்டு மொத்த ஊடகவியலாளர்களையும் அவமானப் படுத்தும் வகையில் உள்ளோதோடு, ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் வகையில் அமைந்துள்ளது.
இது குறித்து அங்கிருந்த ஊடகவியலாளர்களிடம் கேட்ட போது அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களை பார்த்து பாராளுமன்ற உறுப்பினர் சிறிநாத் மிக மோசமான வார்த்தை பிரயோகங்களை மேற்கொண்டார். கடந்த காலங்களில் தமிழ் தேசியத்திற்காகவும், தமிழரசுக் கட்சியின் செய்திகளை வெளியிடும் போது அது தங்களுக்கு எதிரானது என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர் எங்கள் மீது அவதூறு பரப்பினர். தற்போது தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரே ஊடகவியலாளர்கள் மீது பொது வெளியில் இவ்வாறு அவதூறு பரப்புகின்றார்
மிக முக்கியமாக தமிழ் தேசியத்திற்காக மிகுந்த அர்ப்பணிப்போடு பணியிற்றிய ஊடகவியலாளர்களை கடந்த காலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசதுரை சந்திரகாந்தன் மாத்திரமே இவ்வாறு ஊடகங்களையும், ஊடகவியலாளர்களையும் பொது வெளியில் அவமானப் படுத்தி அச்சுறுத்தல் விடுத்து வந்த நிலையில் தற்போது அந்த வரிசையில் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிநாத் அவர்களும் இணைந்துள்ளார் என ஊடகவியலாளர்கள் கடும் விமர்சனம் தெரிவித்துள்ளனர்.

Post A Comment:
0 comments so far,add yours