(கனகராஜா சரவணன்)

வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் சிகர நிகழ்வான ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் (12) புதன்கிழமை மதியம் 12 மணிக்கு ஆலயத் தீர்த்தக் கேணியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ வெகு விமர்சையாக நடைபெற்றது.

கடந்த 03 ஆம் திகதி திருக்கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய இப்பெருவிழாவின் 10 ஆம் நாளான இன்று, ஆடி அமாவாசை தினத்தில் தீர்த்தோற்சவம் இனிதே இடம்பெற்றது.
ஆலயத்தில் இடம்பெற்ற விசேட அபிஷேக, பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து, வசந்த மண்டபப் பூஜை நடைபெற்று, சுவாமி வெளிவீதி உலா வந்து வேத பாராயணங்கள் முழங்க, பக்தர்களின் 'அரோகரா' கோஷத்திற்கு மத்தியில் மாமாங்கேஸ்வரர் தீர்த்தக் கேணியில் தீர்த்தோற்சவம் நடைபெற்றது.

தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனிதத் தீர்த்தத்தில் நீராடி இறைவழிபாடு செய்தனர்.

மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமையப்பெற்று, ஸ்ரீ இராம பிரானால் வழிபடப்பட்டதாக வரலாற்றுத் தொன்மையும் புகழும் மிக்க இப் புண்ணிய தலத்தில், ஆடி அமாவாசை தினத்தில் தந்தையை இழந்தவர்கள் பிதுர்கடன் செலுத்தி ஆத்ம சாந்தி பிரார்த்தனைகளில் ஈடுபடுவதும் இவ்வாலயத்தின் தனிச்சிறப்பாகும்.

இத் தீர்த்தோற்சவ நிகழ்வில் நாட்டின் பல்வேறு பாகங்களிலிருந்தும் வருகை தந்த பல்லாயிரக்கணக்கான ஆன்மீக அன்பர்களும் பக்தர்களும் கலந்து கொண்டு மாமாங்கேஸ்வரரின் அருளைப் பெற்றுச் சென்றனர்





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours