கல்முனை வடக்கு வைத்தியசாலை விவகாரம்: இன, மத உணர்வுகளைத் தூண்டி அரசியல் இலாபம் தேட அனுமதிக்க முடியாது – பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா
கிழக்கு மாகாணம் போன்ற பல இனங்களும் பல மதங்களும் ஒன்றிணைந்து வாழும் பிரதேசங்களில் நிர்வாகத் தீர்மானங்கள் சமூக நுண்ணுணர்வுடனும் மிகுந்த பொறுப்புடனும் மேற்கொள்ளப்பட வேண்டும் என வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் தற்போது ஏற்பட்டுள்ள சர்ச்சைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ள சில விதிமுறைகளும் சுற்றறிக்கைகளும் தற்போதைய அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்டவை அல்ல எனவும், அவற்றில் காலத்திற்கேற்ற மாற்றங்கள் தேவைப்படுமாயின் அவற்றை மீளாய்வு செய்து, சட்டம், தொழில்சார் தேவைகள், மத உரிமைகள் மற்றும் தனிநபர் மரியாதை ஆகியவற்றை சமநிலைப்படுத்தும் முற்போக்கான மற்றும் நடைமுறைக்கு ஏற்ற தீர்வை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளும் கலந்துரையாடல்களும் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2004ஆம் ஆண்டிலேயே மக்கள் விடுதலை முன்னணி அரசாங்கத்தின் பங்காளியாக இருந்த காலப்பகுதியில், முஸ்லிம் மாணவிகளின் மத மற்றும் கலாசார தேவைகளை கருத்திற்கொண்டு மேலதிக பாடசாலை சீருடைத் துணி வழங்கும் ஏற்பாடு அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அப்போது கலாசார மற்றும் தேசிய மரபுரிமைகள் அமைச்சராக இருந்த விஜித ஹேரத் அவர்களும் இத்தகைய முற்போக்கான அணுகுமுறைக்கு ஆதரவாக முக்கிய பங்காற்றியதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, மத மற்றும் கலாசார உரிமைகளை மதிப்பது தற்போது புதிதாக எடுக்கப்பட்ட நிலைப்பாடு அல்ல எனவும், அது மக்கள் விடுதலை முன்னணியின் நீண்டகால முற்போக்கான அரசியல் அணுகுமுறையின் தொடர்ச்சியாகும் எனவும் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.
“ஒரு நடவடிக்கைக்கு சட்ட ரீதியான நியாயம் இருக்கலாம். ஆனால் அது சமூக ரீதியாகவும் நெறிமுறை ரீதியாகவும் நியாயமானதாக இருக்க வேண்டும்” எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அரசாங்கமும் ஜனாதிபதியும் மக்கள் மத்தியில் வலுவான நம்பிக்கையையும் ஆதரவையும் பெற்றுள்ள நிலையில், இந்தச் சூழ்நிலையை சிலர் தேவையற்ற விதத்தில் பெரிதுபடுத்தி, இன மற்றும் மத உணர்வுகளைத் தூண்டி அரசியல் இலாபம் தேடுவதற்கு பயன்படுத்த முயற்சிப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், நிர்வாகப் பிரச்சினையொன்றை தமிழ்–முஸ்லிம் அல்லது வேறு எந்த சமூகங்களுக்கிடையிலான மோதலாக மாற்றி, அதன் மூலம் அரசாங்கத்தின் மீது அவநம்பிக்கையை உருவாக்க எவரையும் அனுமதிக்க முடியாது எனவும் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இனவாதத்திற்கும் மத அடிப்படையிலான பாகுபாட்டிற்கும் தற்போதைய அரசாங்கத்தில் எந்தவித இடமும் இல்லை என்பதே அரசாங்கத்தின் உறுதியான கொள்கை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் ஏற்கனவே நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து தரப்பினரின் உரிமைகள், தொழில்சார் தேவைகள், தனிநபர் மரியாதை மற்றும் சமூக நல்லிணக்கம் ஆகியவற்றைப் பாதுகாக்கும் வகையில் முற்போக்கான, நியாயமான மற்றும் நடைமுறைக்கு ஏற்ற தீர்வொன்றை ஏற்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனவும் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா மேலும் தெரிவித்துள்ளார்.

Post A Comment:
0 comments so far,add yours