​வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு, மண்டூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு, வருகை தரும் ஆயிரக்கணக்கான பக்தர்களின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் விசேட பரிசோதனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.


​மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் R. முரளீஸ்வரன் அவர்களின் வழிகாட்டலில், வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரி T. மிருணாளன் தலைமையில் பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள் அடங்கிய குழுவினர் இக்கண்காணிப்புச் சேவையில் ஈடுபட்டு வருகின்றனர்.


​இரவு நேர அதிரடிச் சோதனை

ஆலயச் சூழல் மற்றும் அப்பகுதியில் இயங்கி வரும் தற்காலிக மற்றும் நிரந்தர விற்பனை நிலையங்கள், உணவகங்கள் என்பன பொதுச்சுகாதாரப் பரிசோதகர்களால் நேற்று முன்  (23.08.2026) ஆம் திகதி இரவு திடீர் அதிரடிச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.


​இச்சோதனையின் போது சுகாதார விதிகளை மீறி முறையற்ற வகையில் உணவுகளைச் சேமித்து வைத்திருந்த மற்றும் விற்பனையில் ஈடுபட்ட வியாபாரிகளுக்குக் கடுமையான எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டதோடு, சுத்தமான முறையில் உணவுகளை விநியோகிப்பது குறித்த ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.


​தொடர் கண்காணிப்பும் பொதுமக்களின் பாராட்டும்..!


பக்தர்களின் நலனைக் கருத்திற் கொண்டு தொடர்ந்து  சுழற்சி முறையில் இரவு பகலாகத் தொடர்ச்சியாக இக்கண்காணிப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


​சுகாதாரப் பரிசோதகர்களின் தொடர்ச்சியான நடவடிக்கைகளால், கடந்த ஆண்டுகளை விட இம்முறை ஆலயச் சுற்றாடலும் உணவகங்களும் மிகவும் தூய்மையாகவும் நேர்த்தியாகவும் காணப்படுவதாகப் பக்தர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.


​ஆலய உற்சவம் ஆரம்பமானது முதல் இதுவரை உணவு சுகாதாரத்தைப் பேணாத வர்த்தகர்களுக்கு எதிராகப் பொதுச்சுகாதாரப் பரிசோதகர்களால் 12 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


​இப்பரிசோதனை நடவடிக்கைகளில் வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் பொதுச்சுகாதாரப் பரிசோதகர்களான K. இளங்கோவன், S. சிவசுதன், S. விக்னேஸ்வரராஜா, S. ஜீவித்தன் மற்றும் பட்டிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் பொதுச்சுகாதாரப் பரிசோதகர் K. சோபனகாந்தன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.


(எஸ்.ரஞ்சன்)






Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours