பாறுக் ஷிஹான்



அம்பாறை மாவட்டம், கல்முனை மற்றும் சம்மாந்துறைப் பகுதிகளின் பிரதான வீதிகளில் கட்டாக்காலி நாய்களின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதன் காரணமாக, பொதுமக்கள் பெரும் அச்சத்துடனும் அசௌகரியங்களுடனும் நடமாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பிரதான வீதிகள் மற்றும் சந்தைப் பகுதிகளில் கூட்டம் கூட்டமாக உலா வரும் இந்தச்   நாய்கள், வீதியால் நடந்து செல்பவர்களையும் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் செல்விகளையும் தேடிச் சென்று கடிக்க முற்படுகின்றன.அத்துடன் தப்பிச் செல்ல முற்படும் போது, பயணிகள் வீதியில் விழுந்து காயமடைவதுடன் தொடர்ச்சியான வீதி விபத்துக்களும் இடம்பெற்று வருகின்றன.

வெளியிடங்களில் இருந்து நகருக்குள் உட்பிரவேசிக்கும் 20-க்கும் மேற்பட்ட கட்டாக்காலி நாய்கள், இரவும் பகலும் வீதியோரங்களில் கொட்டப்படும் கழிவுகளைக் கிளறி உண்பதனால் அப்பகுதிகளில் விலங்கினக் கழிவுகள் சிதறிக் காணப்படுகின்றன. இவை உரிய முறையில் அகற்றப்படாததால் கடுமையான துர்நாற்றம் வீசுவதுடன், பகுதியில் பெரும் சுகாதாரச் சீர்கேடும் உருவாகியுள்ளது.

இரவு நேரங்களில் வீதிகளின் நடுவே கூட்டம் கூட்டமாக நாய்கள் உறங்குவதனால், வீதிப் பயனாளிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.எனவே, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், விபத்துக்கள் மற்றும் நோய் பரவல் அபாயங்களைத் தடுக்கவும் சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி மன்ற அதிகாரிகளும் சுகாதாரத் துறையினரும் உடனடியாகக் தலையிட்டு, இக்கட்டாக்காலி நாய்களைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

--
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours