வாசிப்பு மனிதனை பூரண மனிதனாக மாற்றும் வல்லமை கொண்டது எனவும், இன்றைய இளைய தலைமுறையினர் வாசிப்பிலிருந்து விலகி தொழில்நுட்ப உலகத்திற்குள் அதிகளவில் மூழ்கி வருவது கவலையளிக்கும் விடயம் எனவும் சிலோன் மீடியா போரத்தின் பொதுச் செயலாளரும், அல் மீஸான் பௌண்டஷன் தவிசாளருமான சிரேஷ்ட ஊடகவியலாளர் நூருல் ஹுதா உமர் தெரிவித்தார்.




சாய்ந்தமருது பொது நூலகத்தின் ஏற்பாட்டில் “நூலாசிரியர்களைச் சந்தித்தல் – 02” எனும் நிகழ்வு (23.08.2026) ஞாயிற்றுக்கிழமை காலை சாய்ந்தமருது பொது நூலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

“வாசிப்பு என்பது வெறுமனே புத்தகங்களைப் படிப்பது மாத்திரமல்ல. அது மனிதனின் சிந்தனையை விசாலப்படுத்தி, அறிவை வளர்த்து, நல்லது எது, தவறானது எது என்பதை பகுத்தறிந்து செயல்படும் ஆற்றலை வழங்குகின்றது. அதனால்தான் வாசிப்பு மனிதனை பூரண மனிதனாக்கும் எனக் கூறுகின்றோம்.

இன்றைய தலைமுறையினர் வாசிப்பிலிருந்து படிப்படியாக விலகி, கையடக்கத் தொலைபேசி உள்ளிட்ட தொழில்நுட்ப சாதனங்களுடன் அதிக நேரத்தை செலவிடும் வாழ்க்கை முறைக்கு பழகிவிட்டனர். தொழில்நுட்ப வளர்ச்சியை நாம் எதிர்க்க முடியாது. ஆனால், தொழில்நுட்பம் வாசிப்பையும் சிந்தனையையும் அழித்துவிட அனுமதிக்கக்கூடாது.

சமூகத்தில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகளிலிருந்து இளைஞர்களைப் பாதுகாக்கும் ஒரு மிகப்பெரிய அரணாக நூலகங்களும் வாசிப்பும் காணப்படுகின்றன. மதஸ்தலங்களுக்கு செல்கின்றவர்கள் தவறான பாதைகளிலிருந்து விலகுவதற்கான வாய்ப்புகள் இருப்பதைப் போன்று, நூலகங்களுக்குச் சென்று வாசிப்பில் ஈடுபடும் இளைஞர்களும் அறிவார்ந்த சிந்தனையுடன் வாழ்க்கையை அணுகுவதற்கான வாய்ப்பைப் பெறுகின்றனர்.

எனவே, இன்றைய தலைமுறையை வாசிப்பை நோக்கியும் நூலகங்களை நோக்கியும் நாம் இழுத்துவர வேண்டும். இது நூலகர்களின் பொறுப்பு மாத்திரமல்ல; பெற்றோர், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், சமூகத் தலைவர்கள், எழுத்தாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவரினதும் கூட்டுப் பொறுப்பாகும்.

என்னைப் போன்ற பலரை ஊடகவியலாளர்களாகவும் எழுத்தாளர்களாகவும் உருவாக்கியதில் வாசிப்புக்கும் நூலகங்களுக்கும் மிகப்பெரிய பங்கு உள்ளது. நான் தினமும் சில நேரங்களை வாசிப்புக்காக ஒதுக்குகின்றேன். அந்த வாசிப்பு பழக்கத்தின் பயனாக இதுவரை 280க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை பத்திரிகைகளில் எழுதியுள்ளேன்.

அந்த எழுத்து என்னை பல்வேறு தளங்களில் கௌரவங்களைப் பெறச் செய்திருக்கின்றது. எனக்கு ஒரு அடையாளத்தை வழங்கியது ஊடகமும் எழுத்தாற்றலுமே. ஆனால், அந்த அடையாளத்திற்கான அடித்தளத்தை அமைத்தது வாசிப்பும் நூலகங்களுமே.

இன்று நூலகங்களுக்கு இளைஞர்கள் வருவது குறைந்து வருகின்ற அதேவேளை, சமூகத்தின் பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி சிறைச்சாலைகளுக்குச் செல்லும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இந்த இரு விடயங்களுக்கும் இடையில் உள்ள தொடர்பை நாம் மிகவும் ஆழமாக சிந்திக்க வேண்டும்.

ஒரு புத்தகத்தை வாசிக்க செலவிடப்படும் ஒரு மணி நேரம், ஒரு இளைஞனின் வாழ்க்கையை மாற்றக்கூடிய ஒரு மணி நேரமாக இருக்கலாம். ஒரு நல்ல நூல் ஒரு நல்ல சிந்தனையை உருவாக்கும்; ஒரு நல்ல சிந்தனை ஒரு நல்ல மனிதனை உருவாக்கும்; நல்ல மனிதர்களே நல்ல சமூகத்தை உருவாக்குவார்கள்.

ஆகவே, நூலகங்களை வெறும் புத்தகங்கள் வைக்கப்படும் இடங்களாகப் பார்க்காமல், சமூகத்தின் எதிர்கால தலைமுறையை உருவாக்கும் அறிவுக் கூடங்களாக நாம் பார்க்க வேண்டும்.” என அவர் மேலும் தெரிவித்தார்.

நிகழ்வில் உலமாக்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், சிரேஷ்ட எழுத்தாளர்கள், கலைஞர்கள், பாடசாலை மாணவர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் போது வாசிப்பு கலாசாரத்தை இளைய தலைமுறையினரிடையே மீண்டும் கட்டியெழுப்புதல், நூலகங்களின் பயன்பாட்டை அதிகரித்தல், மாணவர்களை வாசிப்பின் பக்கம் ஈர்த்தல் மற்றும் எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் இடையிலான தொடர்பை வலுப்படுத்துதல் தொடர்பிலும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours