எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே. எஸ். அருள்ராஜ் அவர்களின் ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (25) நடைபெற்றது.

அதிமேதகு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்கள் கடந்த மே மாதம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டபோது நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் தொடர்பாக, நிகழ்நிலை ஊடாகக் கலந்து கொண்ட அமைச்சரினால் விசேட மீளாய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும், பிரஜாசக்தி வேலைத்திட்டங்கள், மாவட்டத்தில் இதுவரை முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள், புதிய வீடமைப்புத் திட்டங்கள், சிறு குளங்களைப் புனரமைத்தல், மக்களின் வாழ்வாதார மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்கள், விவசாய நடவடிக்கைகள், உணவுப் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் மீளாய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர், மாவட்டத்தில் நீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்பதுடன், மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு அனைத்து தரப்பினரினதும் ஒத்துழைப்பு அவசியம் எனத் தெரிவித்தார்.

மேலும், மேய்ச்சல் தரைக்காக ஒதுக்கப்பட்டுள்ள மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரையை விடுவித்தல், முந்தானையாற்றை அபிவிருத்தி செய்தல், கிரான் பொண்டுகள்–சேனைப் பால நிர்மாணப் பணிகளின் முன்னேற்றம், மண்டூர்–குருமண்வெளி மற்றும் பட்டிருப்பு பால நிர்மாணப் பணிகளின் முன்னேற்றம், அம்பிளாந்துறை–குருக்கள்மடம், திக்கிலிவெட்டை–சந்திவெளி மற்றும் நரிப்புல் தோட்டம்–பங்குடாவெளி ஆகிய பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட வேண்டிய பாலங்களின் நிர்மாணப் பணிகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், மனித–காட்டு யானை மோதல்கள், நெல் கொள்வனவு, களப்பு வாவியைத் தூர்வாருதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் இதன்போது மீளாய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும், எல் நினோ தாக்கத்தினால் மாவட்டத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய செயற்றிட்டங்கள் தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு இதன்போது ஆலோசனைகள் வழங்கப்பட்டதுடன், மக்களைப் பாதுகாப்பதற்காக முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இந் நிகழ்வில் மாவட்ட திட்டமில் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், மூப்படை உயர் அதிகாரிகள்,  திணைக்கள தலைவர்கள், உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.






Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours