எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கத்தோலிக்க ஆலயங்களுள் புகழ்பெற்ற ஆயித்தியமலை புனித சதா சகாய மாதா திருத்தலத்தின் 72 வது வருடாந்த திருவிழா 28 ஆம் திகதி வௌ்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.

கரடியனாறு சந்தியிலிருந்து அன்னையின் திருச்சொருப பவனி பிற்பகல் 4 மணியளவில் ஆலயத்தை வந்தடைந்து,  அருட்தந்தை ஜெரிஸ்டன் வின்சன் தலைமையில் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் என்.சத்தியானந்தி அவர்களின் பங்குபற்றலுடன் மாலை 5 மணியளவில் கொடியேற்றம் இடம் பெற்று முதலாம் நவநாள் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.

எதிர்வரும் 5ம் திகதி சனிக்கிழமை காலை 5 மணிக்கு பாதயாத்திரை ஆரம்பமாகும் எனவும் வழமைபோன்று மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்திலிருந்து ஆரம்பமாகி வவுணதீவு ஊடாகவும், மற்றைய யாத்திரை செங்கலடி புனித நிக்கலஸ் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி கரடியனாறு ஊடாகவும் இரு வழிப் பாதயாத்திரையாக ஆயித்தியமலை புனித சதா சகாய மாதா ஆலயத்தை வந்தடையும்.

அன்னையின் இறுதி பெருவிழா கூட்டுத்திருப்பலி மட்டக்களப்பு மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலிகரும் யாழ்ப்பாண மறை மாவட்ட ஆயருமான பேரருட்தந்தை பீ.அன்டன் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் திருகோணமலை மறை மாவட்ட  ஆயர் கிறிஸ்டியன் நோயல் இம்மானுவேல் ஆண்டகை அவர்களினால் ஒப்புக்கொடுக்கப்பட்டு, எதிர்வரும் 06.09.2026 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 05 மணிக்கு முதல் திருபலியானது சிங்கள மொழியிலும் அதனைத் தொடர்ந்து காலை 7 மணிக்கு வரவேற்புடன் பெருவிழா கூட்டுத்திருப்பலியும் இடம்பெற்று திருவிழா இனிதே நிறைவுபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours