​மட்டக்களப்பு மாவட்டத்தில் குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியினருக்கு சிகிச்சையளிக்க தனியார் வைத்தியசாலைகள் 50 இலட்சத்திற்கும் மேல் வசூலித்து வரும் நிலையில், ஏழை மக்களின் நலன் கருதி களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் இலவச "கருவளர்" சிகிச்சை மையம் ஆரம்பிக்கப்பட்டது. மண்முனை தென்எருவில்பற்று பிரதேச சபைக்கு சொந்தமான வாகன தரிப்பிடத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தை, வைத்தியசாலை அபிவிருத்தி சங்கம் ஊடாக இதற்காக செலவிட பிரதேச சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த உன்னதமான திட்டத்தின் மூலம் நமது பிரதேசம் மட்டுமன்றி வெளியூர்களைச் சேர்ந்த சுமார் 1740 தம்பதியினர் இதுவரை வெற்றிகரமாக சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர்.


​ஆனால், தற்போது இந்த மகத்தான திட்டம் திட்டமிட்டு முடக்கப்பட்டுள்ளது. பிரதேச சபையின் வாகன தரிப்பிடத்தின் மூலம் கிடைத்த நிதியை களுவாஞ்சிகுடி வைத்தியசாலையின் அத்தியட்சகர் (MS) விடுவிக்காமல் தடுத்து வைத்துள்ளமையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கொள்வனவு செய்யப்பட்ட மருந்துகளுக்கான 8 இலட்சத்திற்கும் மேற்பட்ட நிலுவைத் தொகையை செலுத்த முடியாமல், கருவளர் சிகிச்சை நிலையத்தின் இயக்கம் முற்றாக தடைபட்டுள்ளது. சில தனியார் வைத்தியசாலை உரிமையாளர்களின் சுயநலத்திற்காகவும், அரசியல் லாபங்களுக்காகவும் விலைபோன வைத்தியசாலை அத்தியட்சகர், தான் பலமுறை மன்றாடியும் மனம் இரங்காமல் இந்த இழிவான காரியத்தை செய்துள்ளார் என மண்முனை தென்எருவில்பற்று பிரதேச சபையின் தவிசாளர் மோகனசுந்தரம் வினோராஜ் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.


​இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கும் விதமாக தவிசாளர் கடுமையான தீர்மானம் ஒன்றை அறிவித்துள்ளார். தடுத்து வைக்கப்பட்டுள்ள அந்த நிதி விடுவிக்கப்பட்டு, மீண்டும் அங்கே கருவளர் சிகிச்சை நிலையம் வெற்றிகரமாக இயங்கும் வரை, களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் திண்மக்கழிவுகளை (குப்பைகளை) பிரதேச சபையின் மூலம் அகற்றுவதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என அவர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.


​ஏழை மக்களின் கண்ணீரில் குளிர்காய நினைக்கும் இந்த மருத்துவ மாபியாக்களின் சதிக்கு எதிராக ஒட்டுமொத்த சமூகமும் குரல்கொடுக்க வேண்டிய நேரம் இது. பிரதேசத்தின் புத்திஜீவிகள், அரசியல் அவதானிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அனைவரும் உடனடியாக ஒன்றிணைந்து இந்த அநீதிக்கு எதிராக தட்டிக்கேட்டு, ஒரு தீர்க்கமான முடிவை எட்ட முன்வர வேண்டும் எனவும் அவர் அறைகூவல் விடுத்துள்ளார்.

Share To:

Post A Comment:

0 comments so far,add yours