​மட்டக்களப்பு மாவட்டம், போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தும்பங்கேணி பகுதியில் இன்று (09.09.2026)ஆம் திகதி  அதிகாலை வேளையில் காட்டுயானை ஒன்று திடீரென ஊருக்குள் புகுந்து கடுமையான சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.

அதிகாலையில் வீடொன்றை இலக்கு வைத்த காட்டுயானை, அதன் பாதுகாப்பு மதில் சுவரை உடைத்துக்கொண்டு வீட்டினுள் அத்துமீறி நுழைந்துள்ளது.

அக்காலப்பகுதியில் வீட்டில் ஆண்கள் எவரும் இல்லாத நிலையில், வீட்டின் உள்ளே தனிமையில் இருந்த பெண்கள் ,சிறுவர்கள் யானையைக் கண்டு பீதியடைந்து, உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அலறியடித்தவாறு அங்கிருந்து ஓடித் தப்பியுள்ளனர்.

பெண்களைத் துரத்திவிட்டு வீட்டினுள் புகுந்த காட்டுயானை, அங்குப் பாதுகாப்பாகச் சேமித்து வைக்கப்பட்டிருந்த 10மேற்பட்ட நெல் மூடைகளைக் கிழித்து உண்டு துவசம் செய்துள்ளது.


போரதீவுப்பற்று பகுதியில் அண்மைக்காலமாகவே காட்டுயானைகளின் அச்சுறுத்தல் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதாகச் சுட்டிக்காட்டும் கிராம மக்கள், இதனால் தங்களின் இயல்பு வாழ்க்கையும் வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் வேதனை தெரிவிக்கின்றனர்.


​எனவே, சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று சேதங்களை  பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய நஷ்டஈட்டினை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


(எஸ்.ரஞ்சன்)




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours