கடந்த (25.09.2026) ஆம் திகதி இரவு மற்றும் இன்று (26.09.2026) அதிகாலை 3 மணியளவில் 37ஆம் கிராமம், நெல்லிக்காடு, கூழாவடி, 35ஆம் கிராமம் மற்றும் விளாம்தோட்டம் ஆகிய பகுதிகளில் ஊடுருவிய காட்டு யானைகள் கடும் வீதிகளிலும் குடியிருப்புப் பகுதிகளிலும் உலா வந்து பெரும் பீதியை ஏற்படுத்தின.
இத்தாக்குதலில் பொதுமக்களின் 8-க்கும் மேற்பட்ட வீடுகள் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன.
அத்துடன் நெல்லிக்காடு பழனி முருகன் ஆலயத்தின் களஞ்சிய சாலையும், அப்பகுதியில் விவசாய நிலங்களில் இருந்த பயன்தரும் மரங்கள் மற்றும் பயிர்களும் முற்றாக அழிக்கப்பட்டுத் துவம்சம் செய்யப்பட்டுள்ளன.
சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும் போரதீவுப்பற்று பிரதேச சபையின் உப தவிசாளர் தங்கராசா கயசீலன் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்தார்.
அவர் வெல்லாவெளி வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் ஊர்காவல் படையினரின் உதவியோடு விரைந்து செயற்பட்டு, ஆபத்தான சூழ்நிலையில் சிக்கியிருந்த பொதுமக்களை எவ்வித உயிர் ஆபத்துமின்றி பாதுகாப்பாக மீட்டெடுத்தார்.
போரதீவுப்பற்று எல்லைக் கிராமங்களில் வேளாண்மை அறுவடை நிறைவடைந்துள்ள நிலையில், மாலை மற்றும் இரவு வேளைகளில் காட்டு யானைகளின் ஊடுருவல் வெகுவாக அதிகரித்துள்ளது.
ஏற்கனவே இப்பகுதியில் யானைகளின் தாக்குதலால் பல உயிர்கள் பலியாகியுள்ளதுடன், ஏராளமான சொத்துக்களும் அழிக்கப்பட்டுள்ளன.
எனவே, எல்லைக் கிராமங்களில் வாழும் மக்களின் உயிரையும் சொத்துக்களையும் பாதுகாக்க உடனடியாக முறையான யானை வேலிகளை அமைக்க வேண்டும் என்றும், வனவிலங்கு திணைக்கள அதிகாரிகளும் அரச தரப்பினரும் நிரந்தரப் பாதுகாப்பு நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் அப்பகுதி பொதுமக்கள் அவசரக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
(எஸ்.ரஞ்சன்)







Post A Comment:
0 comments so far,add yours