கடந்த பாராளுமன்ற தேர்தல் மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழரசுக் கட்சிக்கே மக்கள் ஆணை வழங்கி உள்ளனர் அந்த மக்களாணையை புறக்கணித்து அரச அனுமதிகளை தடுப்பதையும், மக்களை குழப்பும் வகையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் உள்ள சில இணைப்பாளர்கள் செயற்படுவதையும் நிறுத்திக் கொள்ள வேண்டும் என ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர் செ. நிலாந்தன் தெரிவித்துள்ளார்.
ஏறாவூர் பற்று பிரதேச சபையின் 16 வது சபை அமர்வில் கலந்து கொண்டு செங்கலடி நகருக்கான புதிய பொதுச் சந்தை அமைப்பது தொடர்பாகவும்JCB இயந்திரம் கொள்வனவு மற்றும் திருத்துவதற்கான அனுமதிகளை வழங்குவதில் ஏற்படுத்தப்படும் இழுத்தடிப்புகள் தொடர்பாக பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
கடந்த பாராளுமன்ற தேர்தலில் இலங்கை முழுவதும் மக்கள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை தெரிவு செய்திருந்தாலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் இலங்கை தமிழரசுக் கட்சிக்கே மக்கள் ஆணை வழங்கி இருந்தனர், அதேபோல் உள்ளூராட்சி சபைத் தேர்தலிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்பான்மையான சபைகளை இலங்கை தமிழரசுக் கட்சியே ஆட்சியை கைப்பற்றி இருந்தது.
இன் நிலையில் மக்கள் வழங்கிய ஆணையை மதித்து தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எங்களை பணியாற்ற அனுமதிக்க வேண்டும்.
அரச அனுமதிகளை தடுப்பதையும்,சில தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இணைப்பாளர் கள் ஊடாக நிர்வாக ரீதியான குழப்பத்தை ஏற்படுத்தி மக்களை குழப்பும் செயற்பாடுகளை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செங்கலடி நகரில் உள்ள சந்தை கட்டிடம் அதன் நிர்வாகம் ஏறாவூர் பற்று பிரதேச சபையின் பொறுப்பில் உள்ளது. அதனை ஏறாவூர் பற்று பிரதேச சபை நிர்வகித்து வருகின்றது.
இன் நிலையில் புதிய பொதுச் சந்தை அமைக்கும் விடயத்தில் சில தேசிய மக்கள் சக்தியின் இணைப்பாளர்கள் தன்னிச்சையான முடிவுகளை எடுத்து அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை வழங்குவதாக அறிகின்றோம். மிக முக்கியமாக செங்கலடி நகருக்கான புதிய சந்தைக் கட்டிடம் அமைப்பது தொடர்பில் தேசிய மக்கள் சக்தி இணைப்பாளர் ஒருவர் அரசாங்கத்திற்கு செயற் திட்டம் மற்றும் நிதி அறிக்கைகள் தயாரித்து அனுப்பி உள்ளதாக தெரிவித்து வருகிறார்.
மட்டக்களப்பு மாவட்டத்திலோ அல்லது ஏறாவூர் பற்று பிரதேச சபையிலோ, அபிவிருத்தி குழு கூட்டத்திலோ இது குறித்து எந்த கூட்டங்களும் நடாத்தி தீர்மானங்கள் எடுக்கப்படாத நிலையில் யாருக்கும் தெரியாமல் இந்த பரிந்துரைகள் எவ்வாறு யாரால் அனுப்பி வைக்கப்பட முடியும்?
ஒரு புறம் ஏறாவூர் பற்று பிரதேச சபை ஊடாக செங்கலடி சந்தை கட்டிடம் அமைப்பது தொடர்பான வேலைத்திட்டங்களை நாம் முன்னெடுத்து வரும் போது யாருக்கும் தெரியாமல், யாருக்கும் அறிவிக்காமல் இன்னுமொரு செயற்றிட்டத்தை தயாரித்து தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இணைப்பாளர்கள் அனுப்பி உள்ளார் என்று கூறுவது
நிர்வாக ரீதியான குழப்பத்தையும் வர்த்தகர்களுக்கும் பிரதேச சபை நிர்வாகத்திற்கும் இடையிலான முரண்பாடுகளையும் ஏற்படுத்தும் வகையில் இது உள்ளது.
உண்மையில் புதிய சந்தைக் கட்டிடம் அமைப்பது தொடர்பில் ஏறாவூர் பற்று பிரதேச சபை சம்பந்தப்பட்ட திணைக்களங்களின் பங்களிப்புடனும், செங்கலடி வர்த்தகர்களின்,பொதுமக்களின் வசதிகளை கருத்தில் கொண்டு நவீன சந்தை கட்டிடத்திற்கான செயற்றிட்டம், கட்டிட வடிவமைப்பு, உத்தேச நிதி அறிக்கைகளை தயாரித்து அரசாங்கத்திற்கு அனுப்ப வேண்டிய நிலையில் தேசிய மக்கள் சக்தியின் இணைப்பாளர் ஒருவர் தன்னிச்சையாக தனக்கு விரும்பியதை செயற்றிட்டங்களாக அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்வதால் நிர்வாக ரீதியாக பல குழப்பங்களும், முரண்பாடுகளும் ஏற்பட கூடும்.
நான் மட்டக்களப்புக்கு வருகை தந்த அமைச்சர் சுனில் கெந்துநெத்தி அவர்களிடம் செங்கலடி நகருக்கான புதிய சந்தைக் கட்டிடம் மற்றும் நகர அபிவிருத்தி தொடர்பான விசேட அபிவிருத்தி குழு கூட்டத்தை கூட்டுமாறு கோரி கடிதம் ஒன்றை வழங்கி உள்ளேன். அதனை கௌரவ தவிசாளரும் பரிந்துரை செய்து விசேட பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் ஒன்றை நடாத்தி அதன் ஊடாக செங்கலடி நகருக்கான புதிய சந்தைக் கட்டிடம் மற்றும் நகர அபிவிருத்தி தொடர்பாக செயற்படுவதற்கான குழு ஒன்றை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல் இன்னுமொரு பிரச்சினை உள்ளது.
ஏறாவூர் பற்று பிரதேச சபை ஊடாக செங்கலடி பொதுச் சந்தை கட்டிடத்தை அகற்றுவது தொடர்பான முன்னாயத்த கூட்டம் கௌரவ தவிசாளர் தலைமையில் நடைபெற்று சில முடிவுகள் எடுக்கப்பட்டு நாங்கள் வர்த்தக சங்கம் ஊடாகவே பொதுச் சந்தை விடயங்களை கையாள்வது என சபையில் தீர்மானங்களை நிறைவேற்றி அதன் படி தவிசாளர் ஒரு முடிவை அறிவிக்கும் போது செயலாளர் இன்னுமொரு சங்கத்தை அனுப்பி அரச உத்தியோகத்தர்கள் மேற்கொள்ள வேண்டிய வர்த்தகர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள சொல்கிறார்.
நாம் தவிசாளர் ஊடாக தீர்மானங்களை எடுத்து நடைமுறைப்படுத்தும் போது செயலாளர் அரசாங்கத்தின் உதவி உள்ளூராட்சி ஆணையாளர் ஊடாக வரும் வேறு ஒரு முடிவுகளை நடைமுறைப்படுத்த முயற்சிக்கின்றார்.
இதனால் வீண் குழப்பங்களும்,முரண்பாடுகளுமே ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.
எனவே அரசாங்கம் மக்கள் வழங்கிய ஆணையை மதித்து எங்களுடன் இணைந்து பணியாற்ற முன் வரவேண்டும்.
JCB இயந்திரம் தொடர்பாகவும் இங்கு தவிசாளர் கருத்து தெரிவித்திருந்தார்.
உண்மையில் ஏறாவூர் பற்று பிரதேச சபைக்கு மிகவும் அத்தியாவசிய தேவையாக உள்ள JCB இயந்திரம் பழுதாகி உள்ள நிலையில் அதனை திருத்துவதற்கான அனுமதியை வழங்காது இழுத்தடிப் செய்து வருகின்றனர்.
அதேபோல் எமது சபையின் சேமிப்பு பணத்தில் புதிய JCB இயந்திரம் ஒன்றை கொள்வனவு செய்வதற்கான அனுமதி கோரி பத்து மாதங்கள் ஆகியும் அதற்கான அனுமதி கிடைக்கவில்லை இதனால் மக்களுக்கு செய்ய வேண்டிய பல சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த அனுமதிகளை அரசாங்கம் புறக்கணிப்பதன் ஊடாக ஏறாவூர் பற்றில் உள்ள மக்களை அரசாங்கம் புறக்கணிக்கிறது என்று தான் கூற வேண்டும்.
எனவே இது போன்ற மக்கள் புறக்கணிப்பு நடவடிக்கைகளை கைவிட்டு மக்கள் வழங்கிய ஆணையை மதித்து ஏறாவூர் பற்று பிரதேச சபை ஊடான மக்கள் பணிக்கு அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் என தெரிவித்தார்.

Post A Comment:
0 comments so far,add yours