​

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று மண்டூர் 35ஆம் கிராமம்  கண்ணன் வித்தியாலயத்தில் சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு, கடந்த (01.10.2026 )ஆம் திகதி அன்று சிறப்பு சிறுவர் தினக் கொண்டாட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

​மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையிலும், அவர்களுக்கு மகிழ்ச்சியையும் பயனுள்ள அனுபவங்களையும் வழங்கும் வகையிலும் விளையாட்டு, கலை மற்றும் பண்பாட்டு நிகழ்வுகள் உற்சாகத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.


​இப்பாடசாலையுடன் இணைந்து இலங்கைச் சைவநெறிக் கழகத்தின் சைவப்பெரியார் சூரன்பெருமானார் கல்விச் செயற்குழுவினால் ஒவ்வொரு சனிக்கிழமையும் சிறுவர் கல்வி மேம்பாட்டுத் திட்டமும், சைவப்பெரியார் அருணாசல தேசிகமணியார் அறநெறிச் செயற்குழுவினால் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அருள்மிகு மாணிக்கவாசகர் சைவசமய அறநெறிப் பாடசாலையும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றன.

இவ்வறநெறிப் பயணத்தில் கண்ணபுரம், புதுமுன்மாரிச்சோலை, விளாந்தோட்டம் மற்றும் நவக்கிரிநகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் இணைந்து பயன்பெற்று வருகின்றனர். 

இதன் மூலம் வகுப்பறைக் கல்விக்கு அப்பால் சமய அறிவும், நல்லொழுக்கமும், பண்பாட்டு விழுமியங்களும் மாணவர்களிடம் வளர்க்கப்பட்டு வருகின்றன.

இந்நிகழ்வின் சிறப்பம்சமாக, கலந்து கொண்ட ஒவ்வொரு மாணவருக்கும் "கந்தபுராணம்" நூல் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

மாணவர்களிடையே புதிய சிந்தனையையும் நல் அறிவையும் விதைக்கும் நோக்கில், இலங்கைச் சைவநெறிக் கழகத்தினால் கடந்த ஆண்டு சங்கமன்கண்டித் தைப்பூசத் திருவிழாவின் போது சிறப்பு மலராக வெளியிடப்பட்ட சிறுவர்களுக்கான கந்தபுராணப் புத்தகம் இவ்வாறு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் போரதீவுப்பற்று பிரதேச சபை உபதவிசாளர் திரு. த. கயசீலன், பாடசாலைக்கான வலயக் கல்வி அலுவலகப் பிரதிநிதி திரு. க. ஹரிகரன், கழகத்தின் அம்பாறை மாவட்டச் செயற்பாட்டாளரும் இயன் மருத்துவருமான சைவத்திரு. ஹரன்ராஜ் கணபதிப்பிள்ளை மற்றும் கழகத்தின் கிழக்கு மாகாணக் கல்விக் குழுவின் ஒருங்கிணைப்பாளரும் கண்ணகிபுரம் விநாயகர் வித்தியாலயத்தின் அதிபருமான சைவத்திரு. ஸ்ரீ கிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

​நிகழ்வை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்த பாடசாலை அதிபர் தயாளன், ஆசிரியர்கள்,மாணவர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.


(எஸ்.ரஞ்சன்)






Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours