(க.விஜயரெத்தினம்)
இ.போ.ச. பஸ் ஊழியர்களின் சம்பளப்பிரச்சனையை போக்குவரத்து அமைச்சு சீர்செய்வதாக தெரிவித்தையடுத்து போராட்டத்தை முற்றாக கைவிட்டுள்ளதாக ஊழியர்கள் தெரிவிக்கின்றார்கள்.


மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி,களுவாஞ்சிகுடி,மட்டக்களப்பு,வாழைச்சேனை,வாகரை,ஏறாவூர் போன்ற இலங்கை போக்குவரத்து சாலைகளில் கடமையாற்றும் இ.போ.ச. பஸ் ஊழியர்கள் கடந்த திங்கட்கிழமை (16) ஆம் திகதி ஆரம்பித்த பணிப்பகிஸ்கரிப்பானது  புதன்கிழமை வரையும் தொடர்ந்த நிலையில் கொழும்பில் போக்குவரத்து அமைச்சில் நேற்று(18)இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து பணிப்புறக்கணிப்பை  புதன்கிழமை மாலையுடன் கைவிட்டு மீண்டும் இன்று வியாழக்கிழமை(19)காலை முதல் தமது  கடமைக்குச் சென்று தங்களின் வேலைகளை ஆரம்பித்து போக்குவரத்து சேவையை முன்னெடுத்து வருகின்றார்கள்.
இந்நிலையில் இன்று வியாழக்கிழமை  (19)  மட்டக்களப்பு மாவட்டத்தில் பஸ் சேவைகள் வழமை போன்று ஈடுபடத்தொடங்கியுள்ளதை காணக்கூடியதாகவுள்ளது.மட்டக்களப்பு -கல்முனை,மட்டக்களப்பு -வாழைச்சேனை,மற்றும் உள்ளூர் சேவைகள் நடைபெறுகின்றது.
இதனால் பாடசாலை மாணவர்களும்,கல்வியக்கல்லூரி மாணவர்களும்,அரச ஊழியர்களும் எவ்வித சிரமமுமின்றி இ.போ.ச. பேரூந்தில் பயணம் செய்ததை காணமுடிந்தது.இதனால் பயணிகள் நிம்மதி அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றார்கள்.
கடந்த திங்கட்கிழமை(16) தொடக்கம் சம்பளப் பிரச்சினை பதவி உயர்வு, தற்காலிக ஊழியர்கள் நிரந்தர நியமனம்  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, இலங்கைப் போக்குவரத்துச் சபை ஊழியர்கள், நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் சிறிலங்கா சுதந்திர தேசிய போக்குவரத்து ஊழியர் சங்கம், அகில இலங்கை மோட்டார் ஊழியர் சங்கம், இலங்கைப் போக்குவரத்து சபை ஊழியர் சங்கம் ஆகியன இணைந்து மேற்கொண்டுள்ள இவ்வேலை நிறுத்தப் போராட்டத்தால் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் பெருந் தொகையான பயணிகள் பலத்த சிரமங்களை எதிர்நோக்கி இருந்தனர்.
போக்குவரத்துச் சபை ஊழியர்களின் இப்பணிப் பகிஷ்கரிப்பால் பெருந்தொகையான பயணிகள், பஸ் தரிப்பு நிலையத்தில் நிறைந்து காணப்படுகின்றனர். நீண்ட தூரம் பயணிக்கும் 
மாணவர்கள், பெண்கள், வயோதிபர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியமை  குறிப்பிடத்தக்கது.

இதேவேளை தொடர்ச்சியாக நடைபெற்ற பணிபகிஸ்கரிப்பினால் கோடிக்கணக்கான வருமானம் நஸ்டமடைந்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சாலைக்கான நிறைவேற்று பணியகத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours