பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பதிவுசெய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்களுடைய சிபாரிசின் அடிப்படையில் ஊர் எழுச்சி திட்டத்தின் மூலம் 0.5 மில்லியன் ரூபாய் வீதம் 10 கழகங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
போரினால் மிகவும் பாதிக்கப்பட்ட பச்சிலைப்பள்ளி பிரதேச விளையாட்டு துறையின் வளர்ச்சிக்காக விளையாட்டுக் கழகங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்கின்ற வேண்டுகோளுக்கிணங்க பாராளுமன்ற உறுப்பினரால் குறித்த நிதி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
பச்சிலைப்பள்ளியின் இத்தாவில் பிரதேசத்தின் கெனடி விளையாட்டுக் கழகத்தினரால் வருடாவருடம் நடத்தப்படுகின்ற மென்பந்து சுற்றுப்போட்டியின் இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரை வழங்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தற்பொழுது கழகங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடு போல் பாரியளவு நிதியினை வேறெந்த காலப்பகுதியிலும் யாரும் கொடுக்கவில்லை என்பதையும் தெரிவித்த அதே நேரம் மீண்டும் மேலதிகமாக பிரதேசத்தில் காணப்படுகின்ற நான்கு கழகங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினரின் விசேட வேண்டுகோளுக்கு அமைய தேசிய அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் ஊடாகவும் 0.5 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார்.
அத்துடன் மாவட்டத்தின் விளையாட்டுத்துறையை வளர்ப்பதற்காக எம்மால் நிதி ஒதுக்கீடுகள் மட்டுமே மேற்கொள்ள முடியும் எனவும் இதற்கு பிரதிபலனாக இளைஞர்கள் மாவட்டத்தின் விளையாட்டு துறையை வளர்ச்சியடைவதற்கு தங்களது திறமையை வெளிக்காட்டி மாவட்டத்துக்கு பெருமை சேர்க்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
கெனடி விளையாட்டுக் கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் தலைமையில் நேற்று மாலை 3 மணியளவில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம விருந்தினராக பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் கலந்து கொண்டிருந்தார் அவருடன் இந்நிகழ்வில் பாடசாலை அதிபர்கள் பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் அபிவிருத்தி உத்தியோகத்தர் கிராம அலுவலர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் கழக வீரர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Post A Comment:
0 comments so far,add yours