யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் தமிழ் பண்பாட்டுத்துறை எனும் தனியான பிரிவினை ஆரம்பிக்கும் முயற்சியில் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இதன் முதல் கட்டமாக இதுதொடர்பான ஆவணங்களை கல்வி இராஜாங்க அமைச்சர் மற்றும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திருமதி. விஜயகலா மகேஸ்வரன் அவர்களிடம் இயக்கத்தின் அகிலத் தலைவர் வி. சு. துரைராஜா இன்று 17/09/2019 அமைச்சரின் காரியாலயத்தில் வைத்து அமைச்சரிடம் கையளித்தார். 

மிகவும் தொன்மையான தமிழர் பாரம்பரிய பண்பாட்டு கலைகள் மற்றும் கலாசார விழுமியங்கள் தொடர்பான பாடநெறி ஒன்றினை ஆரம்பித்து வளர்ந்து வரும் மாணவர்களுக்கு அது தெளிவாக கற்பிக்கப்பட வேண்டும் எனும் உயரிய நோக்கில் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் இந்த முயற்சியில் இறங்கியுள்ளதாக தலைவர் துரைராஜா அமைச்சரிடம் எடுத்துக் கூறினார்.

 இந்தக் கருத்தை வரவேற்ற அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அண்மையில் தனது முயற்சியினால் யாழ் பல்கலைக்கழகத்தில் இந்து நாகரீக துறைக்கு தனியான பிரிவு ஆரம்பிக்கப்பட்டது என்றும் இது மிகவும் வரவேற்கத்தக்க ஒன்று என்றும் மிக விரைவில் இது தொடர்பாக ஆராய்ந்து அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை சமர்ப்பித்து வெற்றிகரமாக இந்த பணியை நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்துள்ளார்.

இந்த தமிழ் பண்பாட்டு துறை  சார்பான  பிரிவிற்கு யாழ் மட்டுவில்  மகாவித்தியாலய  கட்டிடத்தை  யாழ் பல்கலைக்கழகத்தின் கீழ் கொண்டுவந்து  இந்த  தமிழ் பண்பாட்டு துறை  பிரிவு மாணவர்களின் பாவனைக்கு  இடமளிக்க முடியும் என்றும்  இயக்கத்தின் தலைவரால் தெரிவிக்கப்பட்டு கருத்துக்கு  அதுதொடர்பாக  உரிய ஆவணங்களை சமர்ப்பித்து  உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் விஜயகலா  தெரிவித்தார்.

இத்தகைய தமிழ் உணர்வு கொண்ட நல்ல முயற்சிக்கு வித்திட்ட உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தையும் அவர் பாராட்டினார். 
இச்சந்திப்பில் அமைச்சர் விஜயகலா வின்  பிரத்தியேக செயலாளர்  திருமதி. இமெல்டா சுகுமார் அவர்களும், உலகத் தமிழ் பண்பாட்டு இயக்க இலங்கைக் கிளையின் துணைத் தலைவரும், இயக்கத்தின் ஊடகச் செயலாளருமான தே. செந்தில்வேலவர் அவர்களும் கலந்து கொண்டார்.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours