(எஸ்.சதீஸ்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசத்திலுள்ள வாழைக்காலை கிராமத்தில் விவசாயத் திணைக்களத்தினால் மாமரச் செய்கை தொடர்பாக பிரதேச விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மத்தி விவசாயப் பிரிவின் பன்சேனை விவசாய போதனாசிரியர் எஸ். ஞானப்பிரகாசம் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் வீ.பேரின்பராஜா, மட்டக்களப்பு மத்தி உதவி விவசாயப் பணிப்பாளர் எம்.எஸ்.எம்.சலீம் பாடவிதான உத்தியோகத்தர் எஸ்.சுதாகரன், மற்றும் விவசாய போதனாசிரியர்கள் விவசாயிகள் என பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது இங்கு வருகைதந்த விவசாயிகளுக்கு பழமரக் கன்றுகள் வழங்கப்பட்டதுடன் மரநடுகை நிகழ்வும் நடைபெற்றது.
மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் வீ.பேரின்பராஜாவின் திட்டமிடலில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதேசத்திலுள்ள பழமரச் செய்கை மேற்கொள்ளும் விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது மாங்கன்றுகள் நடுவது முதல் அதனை தொடர்ச்சியாக பராமரிப்பது வரை விளக்கமளிக்கப்பட்டதுடன் செய்முறைப் பயிற்சியும் வழங்கப்பட்டது.
இதில் குறிப்பாக சிறந்த முறையில் மாமரங்களின் கிளைகளை கத்தரித்தல் மற்றும் பங்கஸ் நாசினி விசிறுதல் போன்ற செய்முறை பயிற்சி பிரதேச விவசாயிகளுக்கு பயனுள்ளதாக அமைந்திருந்தது.
எமது நாட்டில் காடுகள் அழிந்து வரும் நிலையில் அழிக்கப்பட்ட இடைவௌியை நிரப்பவேண்டும் எனும் எண்ணத்துடன் நாம் ஒவ்வொருவரும் நமது பழமரக் கன்றுகளையாவது நடவேண்டும். இதன் மூலம் இயற்கை அழிவில் இருந்து எம்மை பாதுகாப்பதுடன் எதிர் காலத்தில் எமது பொருளாதாரத்தையும் உயர்த்திக்கொள்ளலாம் என அதிதியாக கலந்துகொண்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் வீ.பேரின்பராஜா தெரிவித்தார்
Post A Comment:
0 comments so far,add yours