"எந்தக் காரணம் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சியை உடைக்க மாட்டோம். அதற்கு இடமளிக்கப்படமாட்டாது.''

- இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களிடம் திட்டவட்ட சொற்களில் உறுதிமொழி அளித்திருக்கின்றார்கள் அக்கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவும், அக்கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாஸவும்.

கடந்த சனியன்று யாழ்ப்பாணத்து விஜயம் செய்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் நேற்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த அமைச்சர் சஜித் பிரேமதாஸவும் அங்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சு நடத்தியபோதே இந்த உறுதிமொழியைத் தனித் தனியே வழங்கியிருக்கின்றனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்ற சர்ச்சை தீவிரமடைந்திருக்கும் நிலையில், அதற்காக ரணிலும் சஜித்தும் முரண்பட்டு நிற்கையில் இந்த உறுதிமொழி வழங்கப்பட்டிருக்கின்றது.

தற்போதைய அரசியல் நிலைவரம் குறித்து இரண்டு தலைவர்களுடனும் தனித்தனியாகக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசினர். ஒரே விடயத்தை இருவருக்கும் அவர்கள் தெரியப்படுத்தினர்.

"நாங்கள் ஐ.தே.கவின் கூட்டணியைச் சேர்ந்தவர்கள் அல்லர். ஆனால், கடந்த நான்கு வருடங்களாக வெளியில் இருந்து இந்த ஐ.தே.கவின் அரசைக் காப்பாற்றி வந்திருக்கின்றோம். நெருக்கடி நேரத்தில் நெருங்கி வந்து உதவியிருக்கின்றோம். இப்போதும் உதவி வருகின்றோம்.

ஐ.தே.க. பிளவுபட்டுப்போனால், அது ஐ.தே.கவுக்கு மட்டும் பாதிப்பல்ல. பல தரப்புகளுக்கும் பாதிப்பு. உங்களுக்கு ஆதரவு தந்து நின்ற எமக்கும் பாதிப்பு.

உங்கள் கட்சியின் உள்வீட்டு விடயத்துக்குள் நாங்கள் வரப்போவதில்லை; வரமாட்டோம். ஆனால், கட்சியை உடைக்காமல், பிளவுபடுத்தாமல் நீங்கள் ஒரு முடிவு எடுக்க வேண்டும். அது உங்கள் கட்சியின் விடயம். அதில் நாம் தலையிடோம். ஆனால், கட்சி பிளவுறாமல் பார்த்துக் கொள்ளுங்கள்'' - என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேற்படி ரணில், சஜித் ஆகிய இருவருக்கும் நெருக்கமான ஆலோசனை கொடுத்தனர்.

அதனை முற்றும் முழுதாக ஏற்றுக்கொண்ட ரணிலும், சஜித்தும் என்ன காரணம் கொண்டும் கட்சியை நாம் உடைக்க விட மாட்டோம் என்று கூட்டமைப்பின் தலைவர்களுக்கு உறுதிமொழி வழங்கினர் என்று அறியவந்தது. 


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours