(த.தவக்குமார்)
மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மண்டூர் கமநல சேவைகள் நிலையத்தில் நேற்று (07) வைக்கோல் எரிப்பதனால் ஏற்படும் விளைவுகள் பற்றிய விழிப்பூட்டல் நிகழ்வு விவசாய போதனாசிரியர் பி.பிறமேந்ரா தலைமையில் நடைபெற்றது.
தொழிநுட்ப உதவியாளர் கே.கிலசனின் ஒத்துழைப்புடன் நடைபெற்ற இந்நிகழ்வில் கமநல சேவைகள் திணைக்களத்தின் உதவி ஆணையாளர் கே.ஜெகன்நாத் மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் வி.பேரின்பராஜா தெற்கு வலய உதவி விவசாய பணிப்பாளர் ரீ.மேகராசா மண்டூர் கமநல சேவைகள் நிலையத்தின் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.ஜெயகாந்தன் கணேசபுரம் பிரிவுக்கான கிராம சேவகர் திருமதி. சாந்தினி ஆகியோர் அதிதிகளாகவும் இபிரதேச செயலக விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர் கமநல சேவைகள் நிலைய உத்தியோகத்தர்கள் விவசாய போதனாசிரியர்கள் தொழிநுட்ப உத்தியோகத்தர்கள் விவசாய அமைப்புக்களின் தலைவர் உட்பட உறுப்பினர்கள் மற்றும் பெருமளவிலான விவசாயிகளும் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் அறுவடையின் பின்னர் வைக்கோல்கள் முற்றுமுழுதாக எரிக்கப்பட்டு வருவதை தடுக்கும் நோக்கில் வைக்கோல் எரிப்பதனால் ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் பற்றிய தொழிநுட்ப விளக்கங்கள் விவசாய போதனாசிரியர் பி.பிறமேந்ரா அவர்களால் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. வைக்கோல் எரியூட்டப்படுவதால் வளிமண்டல வளி மாசடைதல் மண்வாழ் நன்மை பயக்கும் நுண்ணங்கிகள் விவசாயிகளின் தோழன் என சொல்லப்படுகின்ற மண்புழு போன்ற உயிரிகள் இயற்கை எதிரிகளான பூச்சியினங்கள் முற்றாக அழிவடைதல் மண்ணிலுள்ள இயற்கையான போசணை மூலகங்கள் இழக்கப்படுதலால் போசணைக் குறைபாடு மற்றும் பூச்சித் தாக்கங்கள் அதிகரித்தல் அத்தோடு ஆடு மாடு போன்ற கால்நடைகளுக்கான மேய்ச்சல் புற்கள் அழிவடைதல் போன்ற பல மோசமான விளைவுகள் ஏற்படுவதாக தெளிவுபடுத்தப்பட்டது.
கமநல சேவைகள் உதவி ஆணையாளர் மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் மண்டூர் கமநல சேவைகள் நிலைய கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோரும் தங்களது உரைகளில் இயற்கையை எதிர்க்கும் மிக மோசமான நடவடிக்கையை செய்து நம்மை நாமே அழித்துக் கொண்டிருக்கின்றோம் இனிவரும் காலங்களில் வைக்கோல்களை எரிக்காது வினைத்திறனாக பயன்படுத்த வேண்டுமெனவும் தவறும் பட்சத்தில் உரமானியம் உட்பட திணைக்களத்தின் சகல சேவைகளையும் பெறமுடியாதவாறு சட்ட நடவடிக்கைகூட எடுக்கப்படலாமெனவும் தெரிவித்ததோடு விவசாயிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும் இனி எந்த வயல்நிலங்களிலும் வைக்கோல் எரியூட்டப்படக்கூடாதெனவும் வலியுறுத்தினர்.








Post A Comment:
0 comments so far,add yours