(எம்.ஏ.றமீஸ்)
கடந்த சில வருடங்களாக இரு சமூகங்களைச் சேர்ந்த தரப்பினர் மத்தியில் இழுபறி நிலையில் இருந்து வந்த ஒரு தொகைக் காணியினை சுமூகமான முறையில் பகிர்ந்தளிப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட வாங்காமம் நாவலடி பிரதேச விவசாயக் காணிகளே இவ்வாறு இரு சமூகத்தவர்களுக்காக பகிர்ந்தளிக்கப்படவுள்ளன. சுமார் நாற்பது இரண்டு ஏக்கர் காணிகளை உரிய தரப்பினருக்கு வழங்கி வைக்கும் வேலைத்திட்டம்  அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரின் வழிகாட்டலின் கீழ் இடம்பெற்று வருகின்றன. இதற்கான ஆரம்ப கட்ட வேலைத்திட்டம் இடம்பெற்றன.

இறக்காமம் மற்றும் தமண பிரதேச செயலகப் பிரிவினை ஒன்றிணைக்கும் எல்லைப் புறங்களில் அமையப் பெற்ற இக்காணிகள் அமையப் பெற்ற பிரதேசத்தினை எல்லைப் படுத்தும் வகையில் எழுந்த முரண்பாடுளை தீர்க்கும் வகையில் இப்பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விவசாயச் செய்கையினை இடைநிறுத்துமாறு காணிச் சொந்தக்காரர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. 

இதற்கமைவாக அப்பிரதேசத்தில் விவசாயம் மேற்கொண்டு வந்த முஸ்லிம் மக்கள் விவசாயச் செய்கையினை கைவிட்டதனால் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கான காணிகளில் விவசாயச் செய்கையினை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட வேண்டுமெனவும் அம்மக்கள் உரிய ஆதாரங்களுடன் தமது காணியினைக் கொண்டுள்ளதாகவும் வலியுறுத்தி  இப்பிரச்சினையினை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் கவனத்திற்கு முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வையினால் பலமுறை கொண்டு வரப்பட்டன.

பரம்பரை பரம்பரையாக அம்பாறை மாவட்ட செயலகத்தினால் வழங்கப்பட்ட உத்தரவுப் பத்திரத்திற்கு அமைவாக இப்பிரதேசத்தில் தாம் விவசாயச் செய்கையினை மேற்கொண்டு வந்ததாகவும், விவசாயச் செய்கை இடைநிறுத்தப்பட்ட வேளையில் ஒரு சில தரப்பினர் தமது காணிகளில் விவசாயச் செய்கை மேற்கொண்டு அக்காணிகள் தமக்கானவை என உரிமை கோரியதையடுத்தே இப்பிரச்சினை தோன்றக் காரணம் என ஒருசாரார் தெரிவிக்கின்றனர். இக்காணிகள் தமக்கானவை என மறுசாரார் தெரிவிக்கின்றனர்.

இவ்விடயம் தொடர்பில் உண்மையான காணிச் சொந்தக்காரர்கள் பாதிக்காமல் தீர்வினை பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என பல முறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் கோரிக்கைகள் விடுக்கப்பட்டபோதிலும் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டபோது அவை தோல்வியில் நிறைவு பெற்றன. காணி ஆணையாளர் நாயகத்தினால் வழங்கப்பட்ட காணி உரிமைப் பத்திரம் கொண்டுள்ளவர்களுக்கு காணிகளை எல்லைப்படுத்தி வழங்கும் வகையில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டது.

இதற்கமைவாக, காணி உரிமை பத்திரம் கொண்டுள்ள 21 பேருக்கு தலா இரண்டு ஏக்கர் காணிகள் வழங்கும் வகையில் முதற்கட்ட நடவடிக்கை  இடம்பெற்றது. இதன்போது முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சரும், கிழக்கு மாகாண முன்பள்ளிக் கல்விப் பணியகத்தின் தவிசாளருமான எம்.எஸ்.உதுமாலெவ்வை, தமண பிரதேச செயலாளர் உதார நாணயக்கார, இறக்காமம் உதவி பிரதேச செயலாளர் நஹிஜா முஸப்பிர், அம்பாறை மாவட்ட சிரேஷ்ட நில அளவை உத்தியோகத்தர் எம்.ரி.எம்.றபீக் உள்ளிட்ட உயர் மட்டக் குழுவினர் கலந்து கொண்டு இரு சமூகத்தவர்களையும் ஒன்றிணைத்து காணிகளை எல்லைப் படுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டன.







Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours