(எம்.ஏ.றமீஸ்)
அமரர் ஆர்.பிரேமதாசவை ஆட்சி பீடம் ஏற்றுவதற்கு எவ்வாறு மறைந்த பெருந் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரஃப் முயற்சிகளைச் செய்தாரோ அதேபோல் அவரது தனையன் சஜித் பிரேமதாசாவினை ஆட்சி பீடம் ஏற்றுவதற்கு எமது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி பாரிய பகிரதப் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றது. அவரை ஆட்சி பீடம் ஏற்றிய பின்பே நாம் அமைதி கொள்வோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவினை ஆதரித்து அக்கரைப்பற்றில் இடம்பெற்ற தேர்தற் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின்போது தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில், இந்த நாட்டின் ஆட்சி பீடம் ஏறுவதற்கு கடந்த ஆட்சிக் காலத்தின்போது எவ்வாறு அமரர் ஆர்.பிரேமதாச பகிரதப் பிரயத்தனங்கள் எடுத்தாரோ அதேபோல்தான் அவரது புதல்வர் சஜித் பிரேமதாசாவும் ஜனாதிபதி வேட்பாளராக ஆகுவதற்கு பல்வேறானா முயற்சிகளில் ஈடுபடவேண்டி ஏற்பட்டது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி எந்த வித நிபந்தனைகளுமற்று ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவிற்கு ஆதரவளிக்கின்றது என சில தரப்பினர் பிரசாரக் கூட்டங்களில் முழங்கித் திரிகின்றனர். நாம் மிக நிதானமாகவும் மிகப் பக்குவமாகவும் வேட்பாளரோடு பேச வேண்டிய அனைத்து விடயங்களையும் பேசி சம்பந்தமான விடயங்களின் மீது மிகத் தெளிவான உடன்பாடுகளுடனேயே நாம் மிக சாதூர்யமாக களம் இறங்கியிருக்கின்றோம்
ஐக்கிய தேசியக் கட்சி கடந்த நான்கரை வருடம் இந்த நாட்டில் ஆட்சி செய்த போதிலும், அந்த ஆட்சியினை ஒழுங்காகச் செய்வதற்கு ஜனாதிபதி அனுமதிக்கவில்லையே என்கின்ற ஆத்திரமும் ஆவேசமும் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் மேலோங்கிக் காணப்பட்டது.
ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இருக்கின்ற முரண்பாடு இந்த ஆட்சியிலே எவ்வளவுதான் அபிவிருத்திகள் நடந்தாலும் அபிவிருத்தியினை ஒதுக்கி விட்டு முரண்பாட்டினை மட்டும் பேசுகின்ற செய்தியினையே சில ஊடகங்கள் வெளியிட்டு வந்தன.
ஐக்கிய தேசியக் கட்சி ஏகாதிபத்தியத்தின் எடுபிடிகள் என்கின்ற விவகாரம் மற்றும் இக்கட்சி சம்பந்தமாக இருந்த சந்தேகங்கள், பிரச்சினைகள் போன்றவற்றை இந்நாடு முழுவதும் உருவாகிய சூழ்நிலையினை நாம் பார்த்திருக்கின்றோம்.
இந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பு நடந்த தேர்தலின்போது நாம் மிக இறுதியாகவே எமது கட்சி ரீதியான முடிவினை எடுத்தோம். ஆனால் இத்தேர்தலின்போது மிக ஆரம்பத்திலேயே எமது முடிவினை எடுத்துள்ளோம். இதற்குக் காரணம் அன்றிருந்த அச்ச சூழல் முழுமையாக நீங்கியது மாத்திரமல்லாமல் முழுமையாகவும் சுதந்திரமாகவும் முடிவொன்றினை எடுக்கக் கூடிய ஒரு பின்புலத்திலே எமது அரசியல் இருந்து கொண்டிருக்கின்றது.
எம்மைப் பொறுத்தமட்டில் யாருக்கும் பயந்து அஞ்சி யதார்த்தத்தினையும் உண்மையினையும் பேசுவதற்கு தயங்காமல் முழுச் சுதந்திரத்துடன் முடிவெடுக்கக் கூடிய ஓர் பின்புலத்திலே எமது அரசியல் இருந்து கொண்டிருப்பதுதான் காரணம்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்னும் ஐந்து கட்சிகளுடன் சேர்ந்து ஓர் ஒப்பந்தம் ஒன்றை செய்திருக்கின்றது. இவ் ஒப்பந்தத்தினை இந்த நாட்டில் உள்ள மகா பீடம் ஒன்று மிகக் கடுமையாக விமர்சித்துக் கொண்டிருக்கின்றது. நாட்டை பிரித்துக் கொடுக்கப் போகின்றார்கள் என்று ஒரு சாரார் விமர்சித்துக் கொண்டிருக்கின்றனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு இருக்கின்ற தரப்பினர் இந்த நாட்டைக் காட்டிக் கொடுக்கின்ற தரப்பினராக வரும் என்றெல்லாம் தற்காலத்தில் மேடைகளில் ஒருசாரார் பேசிவருகின்றனர்.
கடந்த காலத்தில் பச்சோந்தித்தனமாக அப்பாவி நாட்டுப்புற பௌத்த மக்களிடையே திணிக்கின்ற இந்த அரசியல் தரப்பு இதேவேலையை திரும்பவும் தம் வேலையினை துவங்கி இருக்கின்றனர்.
எமது சுய கௌரவித்தினை அடகு வைத்து பயந்து பீதியிலே அடிமை அரசியலொன்றை இனிமேலும் இந்நாட்டில் எம்மால் செய்ய முடியாது. ஏகாதிபத்தியத்தின் கூலிக்கமர்த்ப்பட்ட கும்பலொன்று மிகப் பெரும் அநியாயத்தினை செய்து விட்டு எம்மத்தியில் ஒழிந்து கொண்டிருந்த செய்தி யாருக்குமே விளங்கவில்லை. அந்த பயங்கரவாத செயற்பாடுகளை வைத்துக் கொண்டு எம் சமூகத்தின் மீது எல்லோரும் சேறு பூச எத்தனித்ததை நாம் மறந்து விடவில்லை.
ஏப்ரல் 21 ஆம் திகதி இந்நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத செயற்பாடுகளின் பின்னர் நாம் மிகத் தெளிவாக ஒரு விடயத்தினைப் புரிந்து கொள்ள வேண்டும். இனிமேல் தனி மனித அரசியலுக்குப் பின்னால் செல்வது ஆபத்து என்பதை மிகத் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். இந்த நாட்டில் நாம் கட்சிகளை அமைத்து முகாமிட்டிருப்பதாக நினைத்துக் கொண்டு வெறும் கூடாரங்களில் இருந்து கொண்டிருக்கும் குறு நில மன்னர்களால் இந்த நாட்டில் இனிமேலும் ஒருவிடயத்தையேனும் செய்து விட முடியாது.
எமது விசாலமான ஆல விருட்சத்தின் கீழ் அனைவரும் ஒற்றுமைப்படுகின்றபோதுதான் நமக்கான பல்வேறு விடயங்களை நமது சமூகத்திற்காக செய்ய முடியும். பிரிந்து நின்று வாய்ப்பேச்சில் வீரம் பேசுவதில் எமது சமூகத்திற்கு எவ்வித நன்மையும் ஏற்படப் போவதில்லை என்றார்.
Post A Comment:
0 comments so far,add yours