(எம்.ஏ.றமீஸ்)
ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் இந்த நாட்டில் உள்ள முழு முஸ்லிம் சமூகமும் தலைகுனிந்துள்ளது. அதனைத் தொடர்ந்து பல்வேறு பட்ட பிரச்சினைகளுக்கு நாம் முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம். எதிர்வரும் தேர்தலின் முடிவின் பின்னர் இந்த நாட்டின் ஜனாதிபதி ஒருவரை முஸ்லிம் சமூதாயமே தெரிவு செய்தது என்ற செய்தியினை இந்த நாட்டுக்கு பகிரங்கமாக சொல்ல முடியுமாக இருந்தால் ஏப்ரல்-21 இல் தலைகுனிந்த சமூகம் அச்செய்தியோடு தலைநிமிந்ர்ந்த சமூகமாக மாற முடியும் என ஜனாதிபதி வேட்பாளர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார்.

அக்கரைப்பற்றில் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், இலட்சக்கணக்கான பௌத்த மக்கள் வாக்களித்தும், பௌத்த மதத் தலைவர்கள் விகாரைகள் மூலம் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்தும் இந்த நாட்டின் ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்ய முடியாமல் போனபோது குறிப்பிட்டளவு வாக்குகளைக் கொண்டு நமது முஸ்லிம் சமூகம் ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்தோம் என்றால் அன்று அவர்கள் தலைகுனிந்து நிற்பார்கள் ஆனால் நாம் தலை நிமிர்ந்து நிற்க முடியும்.
நான் ஜனாதிபதி வேட்பாளர் என்பதிலும் பார்க்க ஜனாதிபதி ஒருவரை தீர்மானிக்கும் ஜனாதிபதி வேட்பாளராகவே இத்தேர்தற் களத்திலே இறங்கியிருக்கின்றேன்.

கடந்த காலத்தில் முஸ்லிம் சமூகம் அனுபவித்து வந்த துன்பங்கள் துயரங்கள் எதிர்கொண்ட கலவரங்கள், மார்;க்க சட்டங்கள், இந்த சமூகத்திற்கிருக்கின்ற அரசியல் உரிமைகள், மார்க்க சட்டங்கள், கலாசாரங்கள் உள்ளிட்ட பல்வேறு பட்ட பிரச்சினைகளை நீக்கவும் இந்த நாட்டிலே யார் ஆட்சிக்கு வந்தாலும் திட்டமிடப்பட்ட செயல்களை இந்த சமூகத்திற்கெதிரான செயல்களை மேற்கொள்வதற்கு தீவிரவாதிகள் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில்தான் நான் இத்தேர்தல் களத்தில் குதித்திருக்கின்றேன்.
எதிர்வரும் காலத்தில் யார் ஆட்சி அமைத்தாலும் அந்த ஆட்சிக்குப் பின்னர் நமது முஸ்லிம் சமூகம் எதிர்நோக்க இருக்கின்ற பிரச்சினைகளை ஒரு சாதராண அமைச்சராக இருந்து கொண்டு அவற்றையெல்லாம் தீர்த்து விட முடியுமா என்ற விடயத்தினை அலசி ஆராய்ந்த பின்பே இந்த தேர்தலிலே இறங்கி இருக்கின்றேன். 

எதிர்காலத்திலே எமது சமூகம் பலமுள்ள ஓர் சமூகமாக மாற வேண்டும். சாதாரணமாக நாம் வாக்களிபதினூடாக பங்குபற்றுகின்ற அரச இயந்திரத்தினை விட அரச இயந்திரத்தினை அல்லது ஜனாதிபதி ஒருவரை தீர்மானிக்கின்ற சக்தியாக இந்த சமூகம் மாறுமாக இருந்தால் அதன் மூலம் அதிக நன்மைகளையும், அதிகாரமுள்ள ஓர் அலகாகவும் நமது சமூகம் மாற முடியும் என்ற அடிப்படையில்தான் இந்தத் தேர்தல் களத்திலே போட்டியிடத் தீர்மானித்தேன்.

இன்றைய சூழ்நிலையில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு வேட்பாளராலும் முதலாவது சுற்றில் ஐம்பது சத வீத வாக்குகளைப் பெற்றுக் கொள்ள முடியாது. கட்சிகள் பிரிந்து நின்று வாக்கு வேட்டையில் ஈடுபட்டு வரும் இத்தருணத்தில் கடந்த கால தேர்தல் முடிவுகளை வைத்துப் பார்க்கின்றபோது ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருக்கு ஐம்பது சத வீத வாக்குகளை பெற்றுக் கொள்ள வேண்டுமாக இருந்தால், அவருக்கு இன்னும் இரண்டு அல்லது இரண்டரை இலட்சம் வாக்குகள் தேவைப்படும். இதனை அடைய முடியாத நிலை ஏற்படும் இடத்து இரண்டாவது சுற்று வாக்குகளை கணக்கிட வேண்டி ஏற்படும்.
இந்த நாட்டிலே மொத்தமாக பதினாறு இலட்சத்து இருபத்தையாயிரம் வாக்குகள் உள்ளன. இவற்றுள் ஆகக் கூடியது சுமார் இரண்டரை இலட்சம் வாக்குகளைத்தான் நான் இத்தேர்தல் மூலம் எதிர்பார்க்கின்றேன். அவ்வாறு இரண்டரை இலட்சம் வாக்குகளை நான் பெறுகின்றபோது இரண்டாவது சுற்றுக்கு வருகின்ற போட்டியாளருக்கு ஆதரவளித்து அவரை ஜனாதபதியாக்குவதற்கு நமது முஸ்லிம் சமூகத்தின் வாக்குகளால் முடியுமாக இருக்கும் இதனை சிவில் சமூகத்தினர் நாட்டில் உள்ள முஸ்லிம்களுக்கு தெளிவுபடுத்தி முஸ்லிம்களின் உதவியால் ஒரு ஜனாதிபதியினை உருவாக்க முடியும் என்ற நிலைப்பாட்டிலேயே நான் ஜனாதிபதி வேட்பாளராக களம் இறங்கியுள்ளேன். 

சமூகத்திற்கு இருக்கும் பிரச்சினைகளுக்கு எவ்வாறு தீர்வு காணப்பட வேண்டும், பெரும்பான்மை சமூகம் அத்தீர்வினை ஏற்றுக் கொள்ளும் வகையில் அதனை நாம் எவ்வாறு கையாள்வது என்பதை மையப்படுத்தி நமது கனவு என்னும் தேர்தல் விஞ்ஞாபனம் ஒன்றை நாம் தயாரித்திருக்கின்றோம். எமது சமூகம் எதிர்காலத்தில் அச்சமின்றி பாதுகாப்புடன் தலைநிமிந்து வாழ்கின்ற நிலைமையினைத் தோற்றுவிக்கக்கூடிய விடயங்கள் பலவற்றை இத்தேர்தல் விஞ்ஞாபனம் கொண்டுள்ளது. இந்த நாட்டில் உள்ள நான்கு இலட்சத்து இருபத்தையாயிரம் குடும்பங்களின் வீடுகளுக்கு நாம் இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தினை தபாலிடவுள்ளோம்.


அறிஞர்கள், கல்விமான்கள், புத்திஜீPவிகள், ஊடகவியலாளர்கள், சமூகமட்ட பிரதிநிதிகள் என அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டுள்ள சிவில் சமூக குழுவொன்று இம்மாத இறுதிப் பகுதியில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற வெற்றி பெறக்கூடிய வேட்பாளர்களோடு பேச்சுவார்த்தையொன்றில் ஈடுபடவுள்ளது.

வட கிழக்கில் வாழ்கின்ற முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை கால தாமதம் ஏற்படுத்தாது இழுத்தடிக்காமல் குறுகிய காலத்தில் பிரச்சினைகளை தீர்த்து வைக்கக்கூடிய தரப்பினராக இருக்கும் ஜனாதிபதி வேட்பாளருன் இப்பேச்சு வார்த்தை அமையும். வட கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே இருக்கின்ற முஸ்லிம்களுக்கு இருக்கின்ற பெரும் பிரச்சினை பாதுகாப்புப் பிரச்சினை தீர்த்து வைக்கக் கூடிய சக்தியாக இவ்வேட்பாளர் இருக்க வேண்டும்.

முஸ்லிம் சமூகத்தினை கருவறுப்பதற்கு திட்டமிடப்பட்ட தரப்பினர் தேர்தலில் போட்டியிடுகின்ற பிரதான இரண்டு முகாம்களிலும் உள்ளனர். இதனை தீர்த்து வைப்பதற்கே நாம் முயல்கின்றோம். இதற்காக நமது முஸ்லிம்கள் ஒற்றுமைப் பட்டு நமது பிரச்சினைகளை தீர்;த்து வைக்கக்க கூடிய ஒருவரை நாம் ஜனாதிபதியாக்க வேண்டியுள்ளது. ஒற்றுமைப் பட்டு நாம் அளிக்கின்ற ஒவ்வொரு வாக்கும் பெறுமதியாகவே அமைந்து விடும். நாம் அளிக்கின்ற வாக்குகள் அதிகரிக்க அதிகரிக்க இந்த நாட்டின் ஜனாதிபதியினை தீர்மானிக்கும் சக்தியாக எம்மைத் தவிர வேறு எவரும் இருந்து விட முடியாது.
மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக் காலத்தில் அலுத்கம கலவரம் ஏற்பட்ட போது எமது சமூகம் ஒற்றுமைப்பட்டு மஹிந்த ராஜபக்ஸவை தோல்வியடையச் செய்தது. அதன் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பின்னணி பற்றி எதுவும் யோசிக்காமல் முஸ்லிம் அரசியல் தலைமைகள் உள்ளிட்ட சகலரும் அவருக்கு ஆதரவு வழங்கி பதினாறு இலட்சம் முஸ்லிம் வாக்குகளில் சுமார் இலட்சம் வாக்குகளை அள்ளி வழங்கி அவரை ஜனாதிபதியாக்கினோம். 

முஸ்லிம்களது வாக்குகளால் ஜனாதிபதியான அவர் இதுவரை ஒரு இடத்திலேனும் நான் முஸ்லிம்களது வாக்குகளால் ஜனாதிபதி ஆனேன் என குறிப்பிடவில்லை. இலங்கை வரலாற்றில் முஸ்லிம்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டதும் தாக்கப்பட்டதும் கடந்த நான்கரை வருடமான அவரது ஆட்சிக் காலப் பகுதியிலாகும். இக்காலப் பகுதியில்தான் சுமார் 340 சம்பவங்கள், நூற்றுக்கு மேற்பட்ட பள்ளிவாசல்கள் ஜிந்தோட்டை முதல் மினுவங்கொடை வரை நாம் தாக்கப்பட்டுள்ளோம். 

நாம் ஒற்றுமைப்பட்டு ஓர் அரசை உருவாக்க முடியுமாக இருந்தால் அந்த அரசாங்கத்திலே நாம் அங்கத்துவம் பெற்றிருந்தால் எமது பலம் அதிகமாக இருக்கும். வெறுமெனே எல்லோரையும்போல் நானும் ஓர் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருக்கு எனது ஆதரவினையும் தெரிவித்து செயற்பட்டால் நான் ஓர் அமைச்சராக வரமுடியுமே தவிர நமது முஸ்லிம் சமூகத்திற்காக உரத்துப் பேச முடியாது என்றார்.
3 Attachments
 
 

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours