(எம்.ஏ.றமீஸ்)
அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட அஷ்ரஃப் நகர்ப் பிரதேசத்தில் உள்ள திண்மக் கழிவு முகாமைத்துவ நிலையம் அமையப் பெற்றுள்ள குப்பை மேட்டில் சுமார் மூன்று வயது மதிக்கத் தக்க காட்டு யானை உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டது.
குறித்த காட்டு யானை திண்மக் கழிவு முகாமைத்துவ நிலையத்தில் சேகரிக்கப்படும் குப்பை மேட்டில் கொட்டப்படுகின்ற கழிவுப் பொருட்களை உட்கொண்டு அதில் உள்ள உணவுகள் ஒவ்வாமையால் உயிரிழந்திருக்கலாம் என கால்நடை வைத்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இறந்த நிலையில் காணப்பட்ட இக்காட்டு யானை நேற்று முன்தினம் காலை வேளையில் சுகவீனமுற்று உயிருக்காக போராடியதை தாம் கண்ணுற்றதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
அட்டாளைச்சேனை அஷ்ரஃப் நகர்ப் பிரதேசத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட திண்மக் கழிவு முகாமைத்துவ நிலையத்தில் தினமும் பல்வேறான பிரதேசங்களிலிருந்து கொண்டு வரப்படும் திண்மக் கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. இக்குப்பை மேட்டில் கழிவுணவுகளை உட்கொள்ளும் காட்டு யானைகள் இரவுப் பொழுதுகளில் மக்கள் வாழும் குடியிருப்புப் பகுதிகளுக்குள் உட்புகுந்து உப உணவுப் பயிரச் செய்கைகள், விவசாயச் செய்கைகள், மரம் செடி கொடிகள் போன்றவற்றை நாசம் செய்து வருவதுடன், தமது குடியிருப்புக்களையும் சேதமாக்கி வருவதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இக்குப்பை மேட்டில் வைத்தியசாலைக் கழிவுகள், கண்ணாடிப் பொருட்கள், உக்காமல் நீண்ட காலம் காணப்படும் பிளாஸ்டிக் பொருட்கள், அழுகிய விலங்குக் கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் இங்கு கொட்டப்படுவதால் இதனை உண்ணும் காட்டு யானைகள் சில கடந்த காலங்களில் இறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours