(எம்.ஏ.றமீஸ்)
அம்பாறை மாவட்டத்தில் உள்ள காணிப் பிரச்சினைகள் தொடர்பில் காணிகளை இழந்த பொதுமக்களினையும் அதற்கென பொறுப்புக் கூறக்கூடிய தரப்பினரையும் ஒன்றிணைத்து அட்டாளைச்சேனை மீனோடைக்கட்டு பிரதேசத்தில் இடம்பெறவிருந்த நிகழ்வு தேர்தல்கள் சட்டத்தினை மீறுவதாக குறிப்பிட்டு அந்நிகழ்வு இரத்துச் செய்யப்பட்டதனால் இப்பிரதேசத்தில் சில மணி நேரம் அமைதியற்ற நிலை ஏற்பட்டது.

அம்பாறை மாவட்டத்தில் அபகரிக்கப்பட்டுள்ள காணி உரிமைக்கான பொறுப்புக் கூறல் நிகழ்வும் இக்காணிப் பிரச்சினை தொடர்பான ஆவணப்படத்தினை திரையிடும் நிகழ்வும் நேற்று(12) அட்டாளைச்சேனை பிரதேசத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை அட்டாளைச்சேனை மனித எழுச்சி நிறுவமும் காணி உரிமைக்கான அம்பாறை மாவட்ட செயலணியும் இணைந்து மேற்கொண்டிருந்தன.

இந்நிகழ்வு தேர்தற் சட்டங்களை மீறுவதாக குறிப்பிட்டு தேர்தல்கள் செயலகத்தின் அட்டாளைச்சேனை பிரதேச முறைப்பாட்டு ஆய்வு நிலையத்தினால் இந்நிகழ்வு இடைநிறுத்தப்பட்டன. இந்நிகழ்வு இடம்பெறவிருந்த கூட்ட மண்டபத்தினை மூடப்பட்டதனைத் தொடர்ந்து நிகழ்விற்காக சமூகமளித்த பல நூற்றுக் கணக்கானோர் பாதையோரம் நின்றிருந்தனர்.

இம்மக்களை அப்புறப்படுத்தும் வகையில் பொலிஸாரும் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டனர். மாற்றுக் கட்சியினைத் சேர்ந்த அரசியற் பிரமுகர்கள் ஏட்டிக்குப் போட்டியாக கருத்துக்களை வெளியிட முனைந்தபோது இப்பிரதேசத்தில் சிறிது நேரம் சலசலப்பும் ஏற்பட்டது.

அம்பாறை மாவட்டத்தில் பல்வேறு காரணங்களினால் காணிகளை இழந்த மூவினங்களையும் சேர்ந்த பெருந் தொகையானோர் இந்நிகழ்வுக்காக அட்டாளைச்சேனை மீனோடைக்கட்டு பிரதேசத்திற்கு சமூகமளித்திருந்தனர். இந்நிகழ்வில் கலந்து கொள்ளும் வகையில் முன்னாள்அமைச்சர் பைஷர் முஸ்தபா, முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஆரிப் சம்சுதீன், ஏ.எல்.தவம் உள்ளிட்ட அரசியற் பிரமுகர்கள் பிரசன்னமாயிருந்தனர்.

இந்நிகழ்வு தேர்தல் செயலகத்தினால் இடை நிறுத்தப்பட்டமையால் இந்நிகழ்வில் கலந்து கொள்ள வருகை தந்த முன்னாள்அமைச்சர் பைஷர் முஸ்தபா பிரதான வீதியோரம் நிலத்தில் அமர்ந்தவாறு சர்வ மதப் பெரியார்களுடன் கலந்துரையாடியதனைத் தொடர்ந்து மக்களின் கருத்துக்களை கேட்டறிந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து அவர் மக்கள் மக்கள் முன் கருத்துத் தெரிவிக்கையில், தாம் அரசியல் செய்வதற்காகவோ, ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்திற்கோ இங்கு சமூகமளிக்கவில்லை. அம்பாறை மாவட்டத்தில் மிக நீண்ட காலமாக சுமார் நான்காயிரம் மக்கள் பதினையாயிரம் ஏக்கர் காணிகளை இழந்து தவிக்கின்றார்கள். 

இவர்களது பிரச்சினையினையினை சம்மந்தப்பட்ட தரப்பினருடனும், அனைத்து இன மதப் பெரியோர்கள் போன்றோரிடத்தில் பேச்சு வார்த்தினையினை ஏற்படுத்தி எதிர்வரும் ஆறு மாத காலத்திற்குள் எப்படியாவது இப்பிரச்சினையினை தீர்த்து வைப்பதற்கு முழு மூச்சாய் நின்று செயற்படுவோம் என உறுதியளித்து செயற்படுவதற்காகவே நாம் இவ்விடம் சமூகமளித்தாகக தெரிவித்தார்.

இதேவேளை இந்நிகழ்வு இடம்பெறும் வளாகத்தினை அண்டிய பிரதேசத்திற்கு சமூகமளித்த முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் இவ்விடயம் தொடர்பில் குறிப்பிடுகையில், நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியினை குழப்பி அரசியல் பாதையினை வேறு திசைக்குத் திருப்பும் வகையில் சில தீய சக்திகள் குழப்பியதாகவும், நீண்ட காலமாக காணப்பட்டு வரும் இப்பிரச்சினையினை வேறு பிரதேசத்தில் இருந்து சில அரசியல் வாதிகள் வருகை தந்து அவர்கள் இப்பிரச்சினையினை தீர்த்துத் தருவதாக வேண்டுமென்று வாக்குறுதி அளிக்கின்றார்கள். இதுவும் மக்களைக் குழப்புகின்ற செயற்பாடாகவே நாம் பார்க்கின்றோம் என்றார்.

அம்பாறை மாவட்டத்தில் 4652 குடும்பங்களினது சுமார் 14127 ஏக்கர் பரப்பளவான காணிகள் பல்வேறு காரணங்களினால் அபகரிக்கப்பட்டுள்ளதாகவும் இதனை தீர்த்து வைத்து மக்கள் நலனை மையப்படுத்தியே நாம் இந்நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தோம். 

இந்நிகழ்வினை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னரே தாம் ஒழுங்கு செய்ததாகவும், தற்போதைய சூழ்நிலையில் எமது நிகழ்வுக்கு அரசியல் பிரமுகர்கள் சமூகமளிப்பது தேர்தல்கள் சட்டத்தினை மீறுவதாக அமையும் என்ற காரணத்தினால் அரசியல்வாதிகளை அனுமதிப்பதில்லை எனவும் நாம் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தோம் இருந்தபோதிலும் எமது ஒன்றுகூடல் நிகழ்வு இடைநிறுத்தப்பட்டமை மிகுந்த கவலையளிக்கின்றது என இந்நிகழ்வினை ஒழுங்கு செய்த மனித எழுச்சி நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கே.நிஹால் அஹமட் தெரிவித்தார்.








Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours