(துதி)
எமது கட்சியோ, கட்சியின் பிரதிநிதிகளோ கடந்த வாரத்தில் மஹிந்தவுடனோ, கோட்டபாயவுடனோ எவ்வித சந்திப்புக்களையும் மேற்கொள்ளவில்லை. அவ்வாறு இரகசியமாக சந்திக்க வேண்டிய தேவையும் எமக்கு இல்லை. ஜனநாயகப் போராளிகள் கட்சியின் பொதுச் செயலாளர் இ.கதிர் தெரிவித்தார்.
எமது கட்சியோ, கட்சியின் பிரதிநிதிகளோ கடந்த வாரத்தில் மஹிந்தவுடனோ, கோட்டபாயவுடனோ எவ்வித சந்திப்புக்களையும் மேற்கொள்ளவில்லை. அவ்வாறு இரகசியமாக சந்திக்க வேண்டிய தேவையும் எமக்கு இல்லை. ஜனநாயகப் போராளிகள் கட்சியின் பொதுச் செயலாளர் இ.கதிர் தெரிவித்தார்.
இன்றைய தினம் இணையத்தளங்களில் ஜனநாயகப் பேராளிகள் கட்சி மஹிந்த மற்றும் கோட்டபாயவுடன் கடந்த வாரம் இரகசியமாகப் பேச்சுவார்த்தை நடத்தியது என்பது தொடர்பில் வெளியான புகைப்படங்களுடனான செய்தி தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த வாரம் எமது ஜனநாயகப் பேரராளிகள் கட்சி மஹிந்தவையும், கோட்டபாயவையும் மிக இரகசியமாக சந்தித்ததாக பல்வேறு இணயத்தளங்களில் பொய்யான செய்திகள் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பில் மக்களுக்குத் தெளிவு படுத்த வேண்டியது எமது தலையாய கடமையாகும்.
ஜனநாயகப் போராளிகள் கட்சி தற்போதைய காலகட்டத்தில் எந்தவொரு நபருடனும் சந்திப்புக்களோ, கலந்துரையாடல்களே மேற்கொள்ளவில்லை. எமது கட்சியின் மீது சேறுபூசும் நடவடிக்கையாக சுமார் மூன்று மாதங்களுக்கு முன்னர் இடம்பபெற்ற சந்திப்பு தொடர்பான புகைப்படங்களை இட்டு ஜனநாயகப் பேராளிகள் மீது அவதூறு பரப்பி வருகின்றனர்.
எமது கட்சியோ, கட்சியின் பிரதிநிதிகளோ கடந்த வாரத்தில் மஹிந்தவுடனோ, கோட்டபாயவுடனோ எவ்வித சந்திப்புக்களையும் மேற்கொள்ளவில்லை. அவ்வாறு இரகசியமாக சந்திக்க வேண்டிய தேவையும் எமக்கு இல்லை. இவ்வாறான செய்திகளில் பிரசுரிக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் நாங்கள் சுமார் 03 மாதங்களுக்கு முன்பு அதாவது ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களாகும். அது அப்போது செய்திகளில் பிரசுரிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
ஒரு ஜனநாயக் கட்சி என்ற ரீதியில் எமது மக்களுக்கான விடயங்கள் தொடர்பில் அனைவருடனும் பேச வேண்டிய தார்மீகக் கடப்பாடு எமக்கு உண்டு என்ற ரீதியில் அந்த சந்திப்பு இடம்பெற்றது. இதில் எமது மக்களின் உரிமை சார்ந்த விடயங்கள் தொடர்பிலேயே கலந்துரையாடப்பட்டதே தவிர எமது சொந்த விடயங்கள் எதுவும் பேசப்படவில்லை.
அப்போது இடம்பெற்ற கலந்துரையாடலின் புகைப்படத்தினை வைத்து இப்போது நாங்கள் இரகசியப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும், இதற்கு வெளிநாடுகளில் உள்ள புலம்பெயர் நபர்கள் ஏற்பாடுகளை மேற்கொண்டதாகவும் இணையத்தளங்கள் உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பிரசுரித்திருக்கின்றது. இத்தகு இணையத் தளங்கள் தங்கள் நம்பகத் தன்மையைக் கேள்விக்குறியாக்கும் விதத்திலேயே செயற்படுகின்றன.
எமது மக்களுக்காக ஆயுத ரீதியில் போராடிய நாம் போராட்டம் மௌனிக்கப்பட்ட தற்போதைய காலகட்டத்தில் நமது மக்களின் உரிமைகள் தொடர்பான விடயங்களுக்காக ஜனநாயக ரீதியில் எமது செயற்பாடுகளை முன்நகர்த்திக் கொண்டு செல்லுகின்ற இவ்வேளையில் எம் மீது இவ்வாறான கறைபூசல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இத்தகு கறைபூசல்களுக்கு நாம் ஒரு போதும் சோர்ந்து போக மாட்டோம். எத்தனை விமர்சனங்கள் வந்தாலும், எத்தனை தடைகள் வந்தாலும் எமது செயற்பாடுகள் உண்மையானதாக, நேர்மையானதாக, எமது மக்களுக்கானதாகவே இருக்கும். அதே போன்று புலம்பெயர் நாடுகளில் வாழுகின்ற எமது போராளிகள், தளபதிகள் அந்த நாடுகளின் ஜனநாயக முறைமைகளை ஏற்றுக் கொண்டு அங்கிருந்து கொண்டு எமது மக்களுக்கான சேவைகளைச் செய்து வருகின்றார்கள். அவர்களின் அவ்வாறான சேவைகளுக்கு கலங்கம் ஏற்படுத்தும் விதமாகவுமே இச் செய்திகள் அமைகின்றன.
இவ்வாறு எங்கள் மீதும், புலம்பெயர் நாடுகளில் உள்ளவர்கள் மீதும் சேறுபூசுகின்ற நடவடிக்கைகளை உண்மைக்குப் புறம்பாகச் செய்திகளை வெளியிடுவோரும், அதனை வெளியிடும் ஊடகங்களும் நிறுத்தி உண்மையான விடயங்களை அறிந்து அதன் பின் வெளியிடுவது ஊடகதர்மத்திற்கும் தாம் சார்ந்த ஊடகத்திற்கும் நற்பெயரை ஏற்படுத்தும் என்று தெரிவித்தார்.
Post A Comment:
0 comments so far,add yours