(துதி)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வாகரைப் பிரதேச சபையின் 2020ம் ஆண்டுக்கான பாதீட்டு வரவு செலவுத் திட்டம் மேலதிக நான்கு வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளதாக வாகரைப் பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.கோணலிங்கம் தெரிவித்தார்.

வாகரைப் பிரதேச சபையின் 21வது அமர்வு சபையின் தவிசாளர் எஸ்.கோணலிங்கம் தலைமையில் சபையின் பிரதான மண்டபத்தில் புதன்கிழமை இடம்பெற்றது.

இதன்போது 2020ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதுடன், உறுப்பினர்களினதும் ஒத்துழைப்புடன் குறித்த வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தவிசாளரினால் தெரிவிக்கப்பட்டது.

இங்கு இரகசிய வாக்கெடுப்புக்கு கோரப்பட்ட நிலையில் பகிரங்க வாக்கெடுப்பு என தமிழ் தேசிய கூட்டமைப்பினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இந்த நிலையில் குறித்த கோரிக்கைக்கு அமைவாக வாக்கெடுப்பு நடாத்தப்பட்ட போது நான்கு மேலதிக வாக்கினால் இரகசிய வாக்கெடுப்பு கோரிக்கை நிராகரிக்கப்பட்டு பகிரங்க வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது.

இதன்போது வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 10 பேர் வாக்களித்ததுடன், எதிராக 06 பேர் வாக்குகள் அளித்தனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் ஓருவர் நடுநிலை வகித்தார்.

இதன்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் 04 பேரும், ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் 02 பேரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் 02 பேரும், தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர் ஒருவரும், சுயேட்சைக்குழு (கருணா அம்மான் கட்சி) உறுப்பினர் ஒருவரும் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

ஆனால் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் ஐந்து உறுப்பினர்களும், சுயேட்சைக்குழு (கருணா அம்மான் கட்சி) உறுப்பினர் ஒருவரும் எதிராக வாக்களித்தனர்.

வாகரைப் பிரதேச சபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினராக இருந்த பா.முரளிதரன் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் இணைந்து கொண்ட நிலையில் குறித்த சபை அமர்வுக்கு கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.







Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours