(காரைதீவு  நிருபர் சகா)

தமிழ்மக்களது பிரச்சினைகளை தேவைகளை ஓரளாவது தீர்க்கலாமென்று எண்ணி நான் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் இணைந்து எம்.பியானேன். ஆனால் தமிழருக்கு த.தே.கூட்டமைப்புத்தான் பிரச்சினை என்பதை பின்னர் உணர்ந்தேன். வெளியேறினேன். பிரதமர் மஹிந்த பின்னால் சென்றால் இலங்கைநாடு சுபீட்சமடையும்.

இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொத்துவில் தொகுதி பிரதம அமைப்பாளரும் அம்பாறை மாவட்ட கரையோரப்பிரதேச இணைப்பாளருமான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.பி.பியசேன மக்கள்முன் தெரிவித்தார்.
அவரது காரியாலயம் அமைந்துள்ள அக்கரைப்பற்றை நோக்கி தினமும் தமிழ்மக்கள் பல்வேறுதேவைகள் நிமித்தம் படையெடுத்துவருகின்றனர்.

அங்கு அதற்கான பதிவும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அவரது செயலாளராக ஓய்வுநிலை ஆலையடிவேம்பு கோட்டக்கல்விப்பணிப்பாளர் எஸ்.இராசமாணிக்கம் செயற்பட்டுவருகிறார்.
மேலும் அங்கு செல்லும் பலர் பொதுஜனபெரமுனவில் உறுப்பினர்களாக சேர்ந்துகொள்வதற்கு விருப்பம் தெரிவித்ததையடுத்து அங்கத்துவப்படிவமும் வழங்கப்பட்டு வருகின்றன. பலர் அவ்விடத்திலேயே உறுப்புரிமை பெறுகிறார்கள்.

கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது நேற்று(4)கூடிய மக்கள் மத்தியில் அவர்; மேலும் உரையாற்றுகையில்:
இந்த நாட்டில் எப்போது இனத்திற்கென்று கட்சிகள் உருவானதோ அன்றிலிருந்து பிரச்சினை உருவானது. மட்டுமல்லஇனநல்லிணக்கத்திற்கும் சமாதானத்திற்கும் அவை குந்தகமாக இருந்தன. சிறுபான்மையினம் அன்றிலிருந்தே பலவழிகளிலும் அழியத்தொடங்கின.
இன்றுகூட தமி;ழ் முஸ்லிம் தலைமைகள் மக்களை வைத்து அரசியல் வியாபாரம் செய்கின்றனர். கெடுகுடி சொல் கேளாதே! என்பர் முன்னோர். அது உண்மை. இவர்கள் சொல் கேட்டு மீண்டுமொருமுறை சிறுபான்மையினம் நடுத்தெருவிற்கு வந்துள்ளது.

த.தே.கூட்டமைப்பினர் 16பாராளுமன்ற உறுப்பினர்களை வைத்து என்ன செய்தனர்? தமது மக்களை தொடர்ந்து ஏமாற்றியேவந்துள்ளனர். கல்முனை தமிழ் பிரதேசசெயலகத்தை பெறமுடியாதவர்கள் சமுர்த்திமுத்திரை கொடுக்கமுடியாதவர்களால் என்ன பிரயோசனம்?
சமஸ்டி சுயாட்சி இணைப்பு என்று பேசிப்பேசி அவர்கள் சுகபோகம் அனுபவிக்கிறார்கள். சுயாட்சி கிடைக்குமா? சமஸ்டி கிடைக்குமா? அல்லது இணைக்கத்தான் முடியுமா? இவையெல்லாம் நிலாவில் அப்பம் சுடுவதைப்போன்ற கற்பனைக்கதை.

தவறான தலைவர்களின் தவறான முடிவுகளால் தமிழ்முஸ்லிம் மக்கள்இன்று அநாதைகளாக நிற்கின்றனர். அவர்கள் ஏமாற்றிப்பிழைக்கும் அரசியல் வியாபாரிகள்.
இப்போது தமிழ்கட்சிகள் ஒன்றியைவேண்டும் என்று நீலிக்கண்ணீர் வடிக்கின்றார்கள். இணைந்த கட்சிகள் பிரிவதற்கு காரணமானவர்களே அவர்கள்தான். தன்னிச்சையாகவும் சர்வாதிகாரமாகவும் நடந்துவிட்டு இன்றுஇணையவேண்டும் என்று போலிநாடகம் ஆடுகிறார்கள்.

நாட்டை நேசிக்கவேண்டும். மண்ணை நேசிக்கவேண்டும்.தாய்நாடு சுபீட்சமடையவேண்டுமெனில் நாமும் தலைநிமிர்ந்து வாழவேண்டுமெனின் மஹி ந்த பின்னால் பயணிப்பதே புத்திசாதுரியமானதாகும்.
ஆசியாவில் ஆச்சரியமிக்க நாடாக மாற்றும் வல்லமை அவருக்கே உண்டு.
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தில் மொட்டுக்கட்சி அமோக வெற்றியீட்டும். அம்பாறையிலும் மொட்டுக்கட்சி ஒருவரே தமிழ் எம்பியாகவருவார். கல்முனை தமிழ் பிரதேச செயலகம் கட்டாயம் அமையவேண்டும்.

அதற்கு மொட்டுக்கு வாக்களிகக்வேண்டும். கடந்த ஜனாதிபதித்தேர்தலில் எமது தலைவர்கள் அது கிடைக்குமென்று வாக்குறுதி அளித்தது உண்மைதான். அதன்படி நீங்கள் மொட்டுக்கு வாக்களித்திருக்கவேண்டுமே. வடக்கு கிழக்கு பூராக பச்சையாக்கிவிட்டு எப்படி தமிழ்பிரதேச செயலகத்தைக் கேட்பது? எதற்கும் நியாயம் இருக்கவேண்டும்.
நாம் எமது கடமையைச்செய்துவிட்டு உரிமையைக் கேட்கவேண்டும். இனிமேல் த.தே.கூட்டமைப்பால் கிழக்குமாகாணசபையைக் கைப்பற்றவே முடியாது. முதலமைச்சரையும் பெறமுடியாது.
 இனியும் அவர்களை நம்பி தமிழ்மக்கள் வாக்களித்தால் இருப்பதையும் இழக்க நேரிடும். வேட்டி மட்டுமல்ல கோவணமும் போய்விடும்.
எனவே மொட்டுக்கட்சியில் இணைந்து வாழ்வை வளமாக்கிக்கொள்ளுங்கள். என்றார்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours