(அறிவு)
கடந்த ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மை இனங்கள் ஒருமித்து ஒன்றுபட்டு நின்று வாக்களித்தன. இந்த ஒற்றுமை என்றைக்குமே தேவையானதாக இருக்கின்றது.என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் தெரிவித்தார்.
இவரின் நிந்தவூர் இல்லத்தில் நேற்று வியாழக்கிழமை காலை ஊடகவியலாளர்களை சந்தித்து நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் சிறுபான்மை இனங்கள் எதிர்கொள்ள நேர்ந்து உள்ள சவால்கள் குறித்து பேசியபோதே இவர் இவ்வாறு தெரிவித்தார்.
இவர் இது தொடர்பாக தெரிவித்தவை வருமாறு:-
கடந்த ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மை இனங்கள் ஒருமித்து ஒன்றுபட்டு நின்று வாக்களித்தன. இந்த ஒற்றுமை என்றைக்குமே தேவையானதாக இருக்கின்றது. எதிர்காலத்தில் சிறுபான்மை இனங்கள் இந்நாட்டில் சகல உரிமைகளுடனும் கூடிய கௌரவ பிரஜைகளாக இயல்பு வாழ்க்கையை வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்துவதற்கு இந்த ஒற்றுமை அத்தியாவசியம் ஆனது. மறுபுறத்தில் எந்த நோக்கங்களுக்காக சிறுபான்மை இனங்கள் பிரிந்து நின்றாலும்கூட ஒவ்வொரு சிறுபான்மை இனமும் ஒன்றின் பின் ஒன்றாக கருவறுக்கப்பட கூடிய நிலைமையே கண் முன் தெரிகின்றது. இந்நாட்டின் முஸ்லிம்களை பொறுத்த வரை சம கால அரசியல் வரலாற்றில் முஸ்லிம்களை கொண்டிராத அமைச்சரவை முதல் தடவையாக உருவாக்கப்பட்டு இருக்கின்றது.
ஒவ்வொரு சிறுபான்மை இனங்களுக்கும் அவரவர் அபிலாஷைகள் இருக்கவே செய்கின்றன.அவை வென்றெடுக்கப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது. ஆனால் அவற்றின் பெயரால் பிரிந்து நிற்பது பேராபத்தானது. ஏனென்றால் சிறுபான்மை மக்களில் அறுதி பெரும்பான்மையானோரால் நிராகரிக்கப்பட்ட ஒருவரே இப்போது இந்நாட்டின் ஜனாதிபதியாக உள்ளார். அவர் ருவன்வெலிசாயவில் இருந்து நாட்டு மக்களுக்கு ஆற்றிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உரையில் சிங்கள பெரும்பான்மை மக்களின் வாக்குகளாலேயே ஜனாதிபதியாக வாகை சூடி உள்ளார் என்று முழங்கினார்.
சிறுபான்மை மக்களின் மனங்களில் மாற்றத்தை கொண்டு வர அவரால் முடியாது என்றே நம்ப வேண்டி உள்ளது. ஏனென்றால் சிறுபான்மை இனங்களின் அபிலாஷைகளுக்கு விரோதமான நிலைப்பாடுகளை பெரும்பான்மை இன மக்கள் மத்தியில் முன்வைத்தே ஜனாதிபதியாக அவர் வந்து உள்ளார். எனவே அவரால் சிறுபான்மை மக்களுக்கான தீர்வுகளை தர முடிய போவதில்லை. அதனால்தான் அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தைகூட அமுல்படுத்த முடியாது என்று கூறுகின்றார். எனவே இவர் புதிய அரசியல் அமைப்பை உருவாக்கி வடக்கு, கிழக்கு மக்கள் கோரி நிற்கின்ற அதிகார பரவலாக்கம் தொடர்பான புரிந்துணர்வுடன் கூடிய ஏற்பாடுகளை அறிமுகப்படுத்துவார் என்று நம்புவதற்கு எந்த அடிப்படையுமே இல்லாமல் உள்ளது. அதே போல வடக்கு, கிழக்குக்கு வெளியில் பரந்து வாழ்கின்ற சிறுபான்மை மக்களின் இயல்பு வாழ்க்கைக்கான சட்டவாட்சியை வலுப்படுத்துகின்ற ஏற்பாடுகளையும் இவர் செய்து தருவார் என்று நம்புவதற்கும் இடமே இல்லாமல் உள்ளது.
ஆகவேதான் தமிழ், முஸ்லிம், மலையக, கத்தோலிக்க பிரதிநிதிகள் அனைவரும் ஒரே மேடையில், ஒரே மேசையில் பரஸ்பர புரிந்துணர்வுடன் அமர்ந்து இருந்துதான் எதிர்கால அரசியலை முன்னெடுத்து செல்ல வேண்டி உள்ளது. இதற்கான முன்னெடுப்புகளை எமது தலைவர் ரவூப் ஹக்கீம் இதய சுத்தியுடன் முன்னின்று மேற்கொண்டு வருகின்றார். அதற்காகவே சிறுபான்மை தலைவர்களுடன் இந்நாட்களில் சந்திப்புகளை மேற்கொள்கின்றார். சிறுபான்மை தலைவர்கள் அனைவரும் தெளிந்த சிந்தனை, தூர நோக்கு, தீர்க்கதரிசனம் ஆகியவற்றுடன் ஒன்றுபட்டு நிற்கும் நாள் தொலைவில் இல்லை. சிறுபான்மை இன மக்களும் தலைவர்களுக்கு பின்னால் ஒன்றுபட்டு நிற்பார்கள் என்பது திண்ணம் ஆகும்.
Post A Comment:
0 comments so far,add yours