(க.விஜயரெத்தினம்)மட்டக்களப்பில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் பாரபட்சமின்றி இழப்பீடு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வெள்ளப் பெருக்கினால் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட வெல்லாவெளிப் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட வேத்துச்சேனை கிராமத்திற்கு நேற்று புதன்கிழமை(11)நேரடி விஜயத்தினை அவர் மேற்கொண்டிருந்தார்.
இதன்போது அப்பிரதேசத்தில் 346 ஏக்கர் வயல் நிலங்கள் அழிவுற்றுக் காணப்படுவதாகவும், பெருமளவிலான சோளன் பயிர்ச் செய்கையும் அழிவடைந்துள்ளதாகவும் கிராம விவசாயிகள் ஞானமுத்து -ஸ்ரீநேசனிடம் தெரிவித்தனர்.
மேலும் வருடந்தோறும் இத்தகைய இயற்கை இடரைச் சந்தித்து வருகின்றோம். வெள்ள காலங்களில் பாதுகாப்பாக தங்குவதற்குக் கூட ஒரு தங்குமிடம் இல்லாதமையினால் பெரும் சிரமத்தினை எதிர்கொள்ள வேண்டியுள்ளதென அம்மக்கள் அவரிடம் சுட்டிக்காட்டினர்.
இவைகளைக் கேட்டறிந்து கொண்ட ஸ்ரீநேசன், இப்பிரதேசத்தில் வெள்ள காலங்களில் மக்களைப் பாதுகாப்பதற்காகவும், அவர்கள் தற்காலிகமாகத் தங்குவதற்காகவும் உயரமான ஒரு மாடிக் கட்டடம் அமைப்பது அவசியத் தேவை என்பதை அரசாங்கத்திடம் வேண்டுகோளாக முன்வைப்பதாகத் தெரிவித்தார்.
இதேபோன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள விவசாயிகளும் இம்முறை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீநேசன் கூறினார்.
வெள்ளப்பாதிப்பினால் நெற்பயிர் வயல் நிலங்களும், சேனைப்பயிர்ச் செய்கைகளும் பாதிப்படைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.அத்தோடு, கால்நடை வளர்ப்பும் அதிகமாகப் பாதிப்புக்குள்ளாகியுள்ளதையும் அவதானிக்க முடிவதாக அவர் குறிப்பிட்டார்.
எனவே பாதிக்கப்பட்ட சகலருக்கும் அரசாங்கம் பாரபட்சமின்றி ழுழுமையாகவும், உடனடியாகவும் இழப்பீடுகளை வழங்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
Post A Comment:
0 comments so far,add yours